இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய முன்னாள் காவல் துறை அதிகாரிகள் டி.ஜி. வன்சாரா, என்.கே.அமீன் ஆகியோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த இளம்பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர், காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், குஜராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது போலி என்கவுன்ட்டர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, ஆமதாபாத் நகர குற்றத் தடுப்புப் பிரிவின் அப்போதைய தலைவரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான பி.பி.பாண்டே உள்பட காவல்துறை அதிகாரிகள் 7 பேருக்கு எதிராக ஆமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2013-இல் முதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
கடந்த மாதம் இவ்வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இஷ்ரத் ஜஹான் உள்பட 4 பேரையும் கடத்தி கொலை செய்ததாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும், எனவே தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கூறி, முன்னாள் காவல்துறைத் துணைத் தலைவர் டி.ஜி. வன்சாரா, முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் என்.கே.அமீன் ஆகியோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமிமா கெளசர் மற்றொரு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜே.கே.பாண்டியா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை உயரதிகாரிகள் கூட்டு சேர்ந்து சதி செய்து, இஷ்ரத்தைக் கொலை செய்து விட்டதாகவும், வன்சாராவிற்கு இக்கொலையில் நேரடித் தொடர்பிருப்பதாகவும் கெளசர் தெரிவித்தார்.
இருதரப்பின் விவாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய முன்னாள் காவல்துறையினர் இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பி.பி.பாண்டே, குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.