உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உத்தரகண்ட் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், ஒடிஸா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வீனித் சரண் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர்.
தில்லியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அறையில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு 3 நீதிபதிகளும் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக முதலில் இந்திரா பானர்ஜி பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, 2ஆவதாக வீனித் சரணும், 3ஆவதாக கே.எம். ஜோசப்பும் பதவியேற்றனர்.
அவர்கள் மூவருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த 3 நீதிபதிகளையும் சேர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியில் இருக்கும் நீதிபதிகள் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மேலும் 6 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
சுதந்திரத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்கும் 8ஆவது பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆவார்.
அவரையும் சேர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தற்போது 3 பெண் நீதிபதிகள் பணியில் உள்ளனர். எஞ்சிய 2 பெண் நீதிபதிகள், ஆர். பானுமதி, ஹிந்து மல்கோத்ரா ஆகியோர் ஆவர். இவர்களில் ஆர். பானுமதியே மூத்தவர்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள கே.எம். ஜோசப், உத்தரகண்ட் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக வரும் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி வரை நீடிப்பார். அவரது நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.
அவரது நியமனம் தொடர்பான கொலீஜியத்தின் முதல் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இருப்பினும் கொலீஜியத்தின் 2ஆவது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தனது ஒப்புதலை அளித்தார்.
அதேநேரத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி. லோகுர், குரியன் ஜோசப், ஏ.கே. சிக்ரி (மூவரும் கொலீஜியம் உறுப்பினர்கள்) உள்ளிட்டோர் சந்தித்து, நீதிபதி ஜோசப் விவகாரத்தில் பணிமூப்பு தொடர்பான தங்களது கவலைகளை தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம், உச்ச நீதிமன்றத்தில் தனக்கு பிறகு மூத்த நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகோயிடம் கலந்து பேசி, இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் எடுத்து செல்வதாக தீபக் மிஸ்ரா உறுதியளித்திருந்தார்.