உத்தரப் பிரதேச மாநிலத்தில் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில் சமாஜவாதி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் செவ்வாய்க்கிழமை விவாதத்தை முன்வைத்தபோது அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாதிப்புக்குள்ளானது துரதிருஷ்டவசமானது; வெட்கக்கேடானது. இந்த விவகாரத்தில் மாநில அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் தலைமை இயக்குநர் அளவிலான அதிகாரிகளை இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக மாநில அரசு நியமித்துள்ளது. குற்றவாளிகள் யாரும் தப்பிவிட முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்ப துறை சார்ந்த அதிகாரிகளிடம் வலியுறுத்துவேன் என்றார் அவர்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: ஆனால், ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.