கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முணாம்பம் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதியதில் படகில் சென்ற 3 மீனவர்கள் இறந்தனர். மேலும், 9 மீனவர்கள் மாயமாகி விட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது, சத்துவா கடற்கரையில் இருந்து செவ்வாய்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சுமார் 15 மீனவர்களுடன் மீன்பிடி படகு கிளம்பி சென்றது. எர்ணாகுளம் மாவட்டம் முணாம்பம் பகுதியில் 24 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது சரக்கு கப்பல் ஒன்று படகு மீது மோதியதில் படகு கவிழ்ந்தது. இவ்விபத்தில் 2 மீனவர்களின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 2 மீனவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 9 மீனவர்கள் காணாமல் போனதாகவும் தெரிவித்தனர்.
படகில் சென்றவர்களில், 11 மீனவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் மேற்கு வங்கத்தையும், ஒருவர் கேரளத்தையும் சேர்ந்தவர்கள் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், இவ்விபத்தில் சரக்கு கப்பல் சம்மந்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும், முழுமையான விசாரணைக்கு பிறகே இத்தகவல் உறுதிப்படுத்தப்படும். அடையாளம் காணப்பட்ட கப்பல் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாகும்.
விபத்து குறித்து அறிந்ததும், கடற்ப டைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மூலம் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போன மீனவர்களை தேடவும், மீட்கும் முயற்சியிலும் ஐஎன்எஸ்., ஜமுனா கப்பல், கூடுதல் ஒளி பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர், அதிநவீன படகு ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.