மக்களவையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய நிதி தீர்மானம் மற்றும் வைப்புத் தொகை காப்பீடு மசோதாவை (எஃப்.ஆர்.டி.ஐ.) மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றது.
சேவை துறை திவாலாகும் பட்சத்தில் அவற்றின் பிரச்னையை தீர்ப்பதற்கு சட்டங்கள் உள்ளன. ஆனால், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை திவாலாகும்பட்சத்தில், அந்த பிரச்னையை தீர்ப்பதற்கு தெளிவான விதிமுறைகள் இல்லை.
இதை சரி செய்யும் வகையில் மக்களவையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி எஃப்.ஆர்.டி.ஐ. மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த மசோதாவில் இருக்கும் பெயில்-இன்' எனும் விதியில், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் திவாலாகும் பட்சத்தில், அதில் முதலீட்டாளர்களால் செய்யப்பட்டுள்ள டெபாசிட்டுகளை பயன்படுத்தி, அந்நிறுவனங்களை தொடர்ந்து இயக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் பணத்தை டெபாசிட் செய்திருப்போரிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, எஃப்.ஆர்.டி.ஐ. மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல், அந்த மசோதாவை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்திருக்கும் தகவலை நிலைக்குழுவிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை கடந்த வாரம் தாக்கல் செய்தது. அதில் எஃப்.ஆர்.டி.ஐ. மசோதாவை திரும்பப் பெறும் முடிவை நிலைக்குழு ஏற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், மக்களவையில் இருந்து எஃப்.ஆர்.டி.ஐ. மசோதாவை திரும்பப் பெறும் மத்திய அரசின் திட்டத்தை மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை சமர்பித்தார். இதற்கு மக்களவை தனது ஒப்புதலை அளித்தது.