தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர்.

பாஜக சார்பில் ஆக. 15 முதல் 30 வரை சமூக நீதி நாள்கள்' கடைப்பிடிக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

பாஜக சார்பில் வரும் 15-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சமூக நீதி நாள்கள்' கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Published on


பாஜக சார்பில் வரும் 15-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சமூக நீதி நாள்கள்' கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. மேலும், தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மீண்டும் வலுப்படுத்தும் வகையிலான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, மேற்கண்ட இரு மசோதாக்கள் தொடர்பாக அவர் பெருமிதம் தெரிவித்ததாக, கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்காக மத்திய அரசு ஆற்றி வரும் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக, பாஜக சார்பில் வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சமூக நீதி நாள்கள்' கடைப்பிடிக்கப்படும்; அடுத்த ஆண்டு முதல் பாஜக சார்பில் ஆகஸ்ட் 1 முதல் 9 வரை சமூக நீதி வாரம் கடைப்பிடிக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை பிரதமர் வெளியிட்டார்.
நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடர், வரும் காலங்களில் சமூக நீதிக்கான கூட்டத் தொடர்' என்று நினைவுகூரப்படும் என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த மசோதாக்களை நிறைவேற்றியமைக்காக, பிரதமர் மோடியின் தலைமைக்கு பாராட்டு தெரிவித்து, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார் மத்திய அமைச்சர் அனந்த குமார்.
முன்னதாக, எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச்சில் அளித்த தீர்ப்பு, அந்த சட்டத்தை நீர்த்துப் போக செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக தலித், பழங்குடியின அமைப்புகள் சார்பில் ஏற்கெனவே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், மீண்டும் அதுபோன்ற போராட்டம் அறிவிக்கப்பட்டது.
எஸ்சி, எஸ்டி சட்டம் மீண்டும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பாஜகவின் கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தியும் வலியுறுத்தியது. இதுதொடர்பாக பாஜக எம்.பி.க்களும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இதைத் தொடர்ந்து, புதிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்