முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்ட பகுதியை நீக்கக் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பான சட்ட உதவிகளை அளிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் ஆச்சார்யாவை தில்லி உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தபோது "டர்புலென்ட் இயர்ஸ் 1980-1996' என்ற தலைப்பில் நூல் ஒன்றினை எழுதினார். அதில் அந்த காலகட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைக் குறிப்பிட்டு அவர் எழுதியிருந்தார். குறிப்பாக, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான தகவல்களும், அதுகுறித்து பிரணாப் முன்வைத்திருக்கும் சில கருத்துகளும் அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், அந்தக் கருத்துகள் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறிய சமூக ஆர்வலர் ஒருவரும், சில வழக்குரைஞர்களும் புத்தகத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளை நீக்கக் கோரி தில்லி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதனை விசாரித்த நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவானது நீதிபதி வால்மிகி ஜே. மேத்தா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வாத, பிரதிவாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் ஆச்சார்யாவை நியமிப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, மனு மீதான விசாரணையை நவம்பர் 26-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
முன்னதாக, இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதி பிரதீபா எம். சிங், வழக்கில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் விலகியது நினைவுகூரத்தக்கது.