ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து செய்திகள் வெளியிடக் கூடாது என்று ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
முக்கியத் தலைவரை (பிரதமர் மோடி) பின்தொடர்பவர்கள் ரஃபேல் ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேட்டை ஊடகங்களில் வெளியிட விடாமல் முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஃபேல் விவகாரத்தில் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவராமல் மூடி மறைப்பதற்காக பல செய்தி ஊடகங்கள் பல்வேறு வகையில் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. விளம்பரங்கள் வரவிடாமல் தடுப்பது போன்ற செயல்களும் அரங்கேறுகின்றன.
இந்த விவகாரத்தில் துணிந்து செயல்பட்ட ஏபிபி செய்தி தொலைக்காட்சியைப் பாராட்டுகிறேன் என்று அந்தப் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் ராகுல் காந்தி பேசினார்.
ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர் பலனடைந்தார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.