பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவோரின் புகைப்படங்களை எந்த வடிவத்திலும் வெளியிடவோ, காட்சி படுத்தவோ கூடாது என்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுமிகளிடம் பேட்டி எடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அதுபோன்ற பேட்டிகளால் மிகுந்த மன பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோக்கூர், தீபக் குப்தா மற்றும் கே.எம்.ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தபோது இவ்வாறு கூறியது.
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் அரசு நிதியுதவியுடன் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு தங்கியிருந்த 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் வெவ்வேறு காலகட்டங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது மருத்துவ ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. டாடா சமூக அறிவியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, நாடெங்கிலும் உள்ள காப்பகங்களில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையங்கள் ஆகிய அமைப்புகள் மட்டுமே, பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமிகளிடம் ஆலோசகர்கள் முன்னிலையில் பேட்டி எடுக்க முடியும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அதேசமயம், பிகாரில் குற்றம் நிகழ்ந்த காப்பகத்துக்கு நிதியுதவி அளித்து வந்த மாநில அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்களை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இந்தியாவில் ஒவ்வொரு ஆறு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக கவலையுடன் கூறினர்.