

கடந்த 1984-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லரை உடனடியாகக் கைது செய்யக் கோரி பாஜகவின் தேசியச் செயலர் ஆர்.பி.சிங், நாடாளுமன்றச் சாலை காவல் நிலைய கூடுதல் காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தார்.
இந்தப் புகார் மனு தொடர்பாக ஆர்.பி.சிங் கூறியதாவது:
தில்லியில் 1984-இல் நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான 5 ரகசிய வீடியோக்கள், தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவால் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அந்த வீடியோக்களில் சீக்கியர்கள் படுகொலைக்கும் தனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள தொடர்பை ஜெகதீஷ் ல் டைட்லர் வெளிப்படுத்தியுள்ளதுடன் தில்லியில் 100 சீக்கியர்களைக் கொன்றுள்ளதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். நான்காவது வீடியோவில் காங்கிரஸ் கட்சியால் நீதித் துறையை சமாளிக்க முடியும் எனவும், 15 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்துள்ளோம்; நீதித் துறையால் என்னை எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் சொல்வது பதிவாகியுள்ளது. ஜெகதீஷ் டைட்லர் எந்த நேரமும் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என்பதால் அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இந்திய குற்றவியல் சட்டத்தின் 302, 147/ 149, 120-பி ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். பேட்டியின் போது பாஜக தலைவர்கள் ஹரீஷ் குராணா, இம்பிரீத் சிங் பக்ஷி ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.