மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் விளைச்சல் இரு மடங்கு உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகை பயிர்களில் பூச்சித் தாக்குதல் பாதிப்புகள் இல்லாததால் விவசாயிகளின் வருவாய் மேம்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள இத்தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மகேஷ் சர்மா பதிலளித்துக் கூறியதாவது:
மரபணு மாற்றப்பட்ட விளைபொருள்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பதற்கு முன்பாக பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவையா? எதிர்விளைவுகள் அற்றவையா? உட்கொள்வதற்கு ஏற்புடையதா? ஆரோக்கியத்தை பாதிக்காதவையா? என பலதரப்பட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்ட பிறகே அவற்றை அனுமதிக்கிறோம்.
அந்த அடிப்படையில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள் கடந்த 2002-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கு முன்பு வரை பருத்தி உற்பத்தி 158 லட்சம் பேல்களாக (ஒரு பேல் என்பது தோராயமாக 225 கிலோ) இருந்தது. தற்போது அது இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது 2016-17-இல் பருத்தி உற்பத்தி 351 பேல்களாக உள்ளன.
மேலும், அப்பயிர்களுக்கு அதிக அளவில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தேவைப்படுவதில்லை. அதேபோன்று நோய்த் தாக்கங்களும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி பயிர்களில் மிகக் குறைந்த அளவே ஏற்படுகின்றன. இதன் காரணமாக விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகி உள்ளது என்றார் மகேஷ் சர்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.