கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யாரு...?

கர்நாடகத்தில் 15-ஆவது சட்டப் பேரவையைத் தேர்ந்தெடுக்க நடக்கும் இந்தத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடையேயும் நிலவுகிறது. 
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யாரு...?

கர்நாடகத்தில் 15-ஆவது சட்டப் பேரவையைத் தேர்ந்தெடுக்க நடக்கும் இந்தத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடையேயும் நிலவுகிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை இந்தியா மட்டுமல்ல, உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளது. இந்தியாவின் ஆட்சிப் போக்கை மாற்றக்கூடிய மக்களவைத் தேர்தல் 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கவிருக்கும் நிலையில், அதன் முன்னோட்டமாக நடப்பதால் கர்நாடகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தென்னிந்தியாவின் நுழைவு வாயிலைக் கைப்பற்ற துடிக்கும் கட்சிகள் இந்தத் தேர்தலை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.  2014-ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்துள்ள வெற்றிப்பயணத்தை நீட்டிக்க பாஜக துடியாய் துடித்து வருகிறது. மேலும் தென்னிந்தியாவின் நுழைவுவாயிலாக கருதும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா ஆகியோரின் செல்வாக்கும் அடங்கியிருப்பதை பாஜக நன்றாகவே உணர்ந்துள்ளது. 
மாநிலக்கட்சியான மஜத, இருபெரும் தேசியக்கட்சிகளை சமாளித்து ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டுக்கு பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் இல்லாமல்தவிக்கும் தொண்டர்களை தக்கவைக்க இந்தத் தேர்தலில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மஜத உள்ளது.
பேரவை அலைகள் 
இந்த முறை நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 5 கோடி வாக்காளர்களைச் சந்திக்கப் போவதை நினைத்து அரசியல் கட்சிகள் நடுங்கத் தொடங்கியுள்ளன. மக்களின் நம்பிக்கையைப் பெற்று சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் வியூகம் அமைக்க தொடங்கியுள்ளன. வேட்பாளர் தேர்வு தவிர, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, பிரசார வியூகங்களை அமைப்பது, வாக்காளர்களை ஈர்க்க 'பரிசு' விளையாட்டில் ஈடுபடுவது போன்றவற்றிலும் அரசியல்கட்சிகள் மூழ்கியுள்ளன. ஆட்சியைக் கைப்பற்ற பேரவைத் தேர்தலுக்கான அலையை உருவாக்க அனைத்துகட்சிகளும் முயற்சித்துவருகின்றன. 
ஆட்சியைத் தக்க வைக்கப் போராடும் காங்கிரஸ்
 வரும் தேர்தலில் பெருவாரியான தொககுதிகளை கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்கும் கனவில் இருக்கும் காங்கிரஸ், தேர்தல் பணிகளில் உற்சாகமாக இறங்கத் தொடங்கியுள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு ஆட்சியைப் பிடித்த பிறகு தீர்மானித்துகொள்ள முடிவெடுத்துள்ள காங்கிரஸ், முதல்வர் சித்தராமையா தலைமையில் தேர்தலைச் சந்திக்க தீர்மானித்துள்ளது. 
முதல்வர் சித்தராமையா அரசின் சாதனைகளுக்கு மக்களிடையே உள்ள வரவேற்பு, மத்திய பாஜக ஆட்சிக்கு எதிரான மக்களின் கொதிப்பு ஆகியவற்றை வாக்குகளாக மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 
கடந்த 2 மாதங்களாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டிருந்த மக்கள் ஆசி பயணத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதை உணர்ந்துள்ள கட்சித் தலைமை, தேர்தல்பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது.  தேசிய அளவில் கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதற்கு இந்தத் தேர்தல் வெற்றி முக்கியம் என்று கட்சி கருதுகிறது. மேலும் 2019-ஆம் ஆண்டில் நடக்கும் மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இந்தத் தேர்தல் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக கட்சித்தலைமை கருதியுள்ளது. எனவே, வேட்பாளர் தேர்வை வெற்றிகரமாக முடித்துள்ள காங்கிரஸ், அடுத்ததேர்தல்பிரசாரத்தில் கவனம் செலுத்ததொடங்கியுள்ளது.
எடியூரப்பாவை முதல்வராக்கும் தீவிர முயற்சியில் பாஜக
பிரதமர் மோடியின் 4 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் செய்த சாதனைகளையும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் தேர்தல் வியூகங்களையும் நம்பி தேர்தல்களம் காண பாஜக திட்டமிட்டுள்ளது. 
முதல்வர் சித்தராமையா அரசின் தோல்விகளால் துவண்டுள்ள மக்கள்,  பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று அந்தக் கட்சியின் முன்னணி தலைவர்கள் நம்புகிறார்கள். எடியூரப்பாவின் செல்வாக்கு, அவர் சார்ந்திருக்கும் லிங்காயத்து சமுதாயத்தின் ஆதரவு பாஜக கைகொடுக்கும் என்றும் அக்கட்சி நம்புகிறது. கடந்த 2 மாதங்களாக அடிக்கடி கர்நாடகம் வந்த அமித்ஷாவின் பிரசாரம் தவிர, லிங்காயத்து, ஒக்கலிகர், குருபர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை கவரும் வகையில் பிரசாரவியூகங்களையும் வகுத்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. 
புதுமையான பிரசார உத்திகள், தகவல்தொழில்நுட்பத்தின் பங்களிப்பை உதவியாக கொண்டு பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. 
வேட்பாளர் தேர்வை ஓரளவு நிறைவுசெய்துள்ள பாஜக, அடுத்தக்கட்டமாக பிரதமர் மோடியை கர்நாடகத்துக்கு அழைத்துவந்து பிரசாரத்தின் தீவிரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆவல் பாஜகவைவிட எடியூரப்பாவிடம் அதிகம் காணப்படுகிறது. எடியூரப்பாவை முதல்வராக்க பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ராஜதந்திரியாக வரத் துடிக்கும் மஜத 
ஆர்ப்பரிப்பு இல்லாமல் அடக்கத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் குமாரசாமிக்கு மக்களை நெருங்கவும், அணுகவும் தெரிந்திருப்பது சாதகமான அம்சங்கள். தேவகெளடா மீது வெறுப்படைந்துள்ள மக்கள் மனதில் குமாரசாமிக்கு எப்போதும் ஆதரவு மலர்கள் காத்திருப்பதை வாக்குகளை மாற்ற மஜத வியூகம் அமைத்துவருகிறது. 
இளைஞர்களிடையே குமாரசாமிக்கு காணப்படும் எழுச்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று மஜத கணக்கு போடுகிறது. 
ஒக்கலிகர் சமுதாயம் தவிர, லிங்காயத்துகள், தாழ்த்தப்பட்டோர், ஊனமுற்றோர், மத-மொழிசிறுபான்மையினரை கவர இப்போதே திட்டங்களை அறிவித்துவருகிறார் குமாரசாமி. ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், கர்நாடக அரசியல் ராஜதந்திரியாக வலம்வர மஜத துடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com