காலிஸ்தான் தொடர்பான இந்தியாவின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: பாகிஸ்தான் நிராகரிப்பு

காலிஸ்தான் தொடர்பாக இந்தியா தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

காலிஸ்தான் தொடர்பாக இந்தியா தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்தியாவில் இருந்து சென்றிருந்த சீக்கிய யாத்ரீகர்களுக்கு, இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்திக்க அந்நாட்டு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதற்கு இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. இந்நிலையில், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை இந்தியா திங்கள்கிழமை சம்மன் அனுப்பி வரவழைத்தது. அப்போது அவரிடம், பாகிஸ்தான் செல்லும் யாத்ரீகர்களிடம் காலிஸ்தான் குறித்து அந்நாட்டு அரசு பேச முயற்சிகள் மேற்கொண்டதாகவும், இந்திய இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தனது பதிலை அளித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பொய் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதன் வாயிலாக, பாகிஸ்தானில் நடக்கும் விழாக்களில் பங்கேற்க சீக்கிய யாத்ரீகர்கள் மேற்கொள்ளும் பயணத்தை வெளிப்படையாக இந்தியா சர்ச்சையாக்கியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலங்களுக்கு சீக்கிய யாத்ரீகர்கள் சென்று பார்வையிடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் எங்கள் அரசு செய்து தந்துள்ளது.
இந்தியாவில் சீக்கிய மதகுரு தொடர்பான சர்ச்சைக்குரிய திரைப்படத்தை திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து சீக்கிய மதத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டமானது, இந்தியாவில் மட்டுமல்லாது, பிற உலக நாடுகளிலும் நடக்கின்றன. பாகிஸ்தானுக்கு சீக்கிய யாத்ரீகர்கள் வருவதற்கு முன்னரே போராட்டம் தொடங்கி விட்டது.
உண்மையை திரிக்கவும், குழப்பவும் இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளில் நியாயமில்லை; இது வருத்தமளிக்கிறது. உண்மையை தவறாக சித்திரிக்க இந்தியா மேற்கொண்டுள்ள பிரசாரமானது ஒருபோதும் வெற்றியடையாது.
இந்தியா சர்வதேச விதிகளை மதித்து நடக்க வேண்டும். பிற மதத்தினருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். குறிப்பாக, மத சிறுபான்மையினருக்கு மரியாதை அளிக்க வேண்டும். ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுப்பதை இந்தியா கைவிட வேண்டும். இப்படி மிரட்டல் விடுப்பதால், ஏற்கெனவே மோசமாகியுள்ள இருநாடுகளிடையேயான சூழ்நிலை மேலும் பாதிக்கப்படவே செய்யும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com