தனிப்பெரும்பான்மையுடன் டிஆர்எஸ் ஆட்சியமைக்கும்: அசாதுதீன் ஒவைஸி

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி(டிஆர்எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்;
தனிப்பெரும்பான்மையுடன் டிஆர்எஸ் ஆட்சியமைக்கும்: அசாதுதீன் ஒவைஸி


தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி(டிஆர்எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்; நாங்கள் ஆட்சியில் இணைய மாட்டோம் என்று அகிலஇந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தங்கள் கட்சியின் துணையின்றி டிஆர்எஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று ஒவைஸி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஒவைஸி கூறியதாவது:
டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவுக்கு தெலங்கானா மக்களின் ஆசி உள்ளது. 2-ஆவது முறையாக அவர்கள் ஆட்சியமைப்பார்கள். எந்த ஒரு சூழலிலும் எங்கள் கட்சியின் உதவி டிஆர்எஸ் கட்சிக்கு தேவைப்படாது. அவர்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார்கள். அதனால் ஆட்சியில் எங்கள் கட்சி இணையத் தேவையில்லை என்றார்.
இந்த தேர்தலில் எங்கள் கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் ஷாவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து செயல்படுகிறார்கள் என்று ஒவைஸி குற்றம்சாட்டினார். கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்ற பெற்ற அகிலஇந்திய மஜ்லீஸ் கட்சி, வரும் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 8 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறப் போவதாக ஒவைஸி தெரிவித்தார்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், டிஆர்எஸ் கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. எதிரணியாக, காங்கிரஸ்,தெலுங்கு தேசம் கட்சி, கம்யூனிஸ்ட் மற்றும் தெலங்கானா ஜன சமிதி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com