நாடாளுமன்ற கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.


நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 11-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு நீளக் கூட்டத்தொடராக இது அமைய உள்ளது. அதனால் நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளும் சுமுகமாக நடைபெறுவதற்காக, உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் நோக்கில் கூட்டத்தொடரின் முந்தைய நாளான 10-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சியினருக்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் அவை நடவடிக்கைகள் குறித்தும், நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் குறித்தும் பிரதமர் மோடி பேச உள்ளார். மேலும், நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக, அனைத்து உறுப்பினர்களையும் ஒத்துழைக்கக் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்திருத்த மசோதாவை அவசர சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும்.
5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற காரணத்தால், நவம்பர் மாதம் தொடங்கிய வேண்டிய கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் பாஜகவும், ஒரு மாநிலத்தில் காங்கிரஸும் ஆட்சியில் உள்ளது. அதனால் வரும் 11-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
முன்னதாக, அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும் தனித்தனியாக அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com