மேகாலயம்: வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய 11 பேர் கைது

மேகாலய மாநிலம் தெற்கு காரோ மலைகள் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் சட்டவிரோதமாக குடியிருந்த 4 சிறுவர்கள் உள்பட 11 வங்க தேசத்தினரை போலீஸார் கைது செய்தனர். 


மேகாலய மாநிலம் தெற்கு காரோ மலைகள் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் சட்டவிரோதமாக குடியிருந்த 4 சிறுவர்கள் உள்பட 11 வங்க தேசத்தினரை போலீஸார் கைது செய்தனர். 
மேகாலய மாநிலம் தெற்கு காரோ மலைகள் மாவட்டத் தலைநகரான தூரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-62ல் எல்லை பாதுகாப்புப்படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வாகனத்தில் வந்த நபர்களை சோதனை செய்த போது, அவர்கள் வங்க தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களில் 4 சிறுவர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். 
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆப்ரஹாம் டி.சங்மா கூறுகையில், பிடிபட்ட நபர்களை கைது செய்ய முயன்ற போது அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் வங்க தேசத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களுடன் வந்த 2 முதல் 5 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். 
இதுகுறித்து எல்லை பாதுகாப்புப்படை அதிகாரிகள் கூறியதாவது: இந்திய- வங்கதேச எல்லையில் தடுப்பு வேலி இல்லாத பகுதி வழியே இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினர் இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். பெரும்பாலும், வங்க தேசத்திலுள்ள நேத்ராகோனா மற்றும் சுனம்கஞ்ச் மாவட்டங்களில் வசித்து வருபவர்களே இந்திய-வங்கதேச எல்லையின் வழியாக ஊடுருவி இந்தியாவுக்குள் நுழைகின்றனர். இவர்கள் மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹர் பகுதியில் குடியிருக்கும் நோக்கத்துடன் இதுபோன்று சட்டவிரோதமாக நுழைகின்றனர். 
தற்போது, வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால் அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் தங்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்று கருதுகின்றனர். பெரும்பாலும், இவர்களே வங்க தேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவுக்குள் நுழைகின்றனர்.
தற்போது, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் மேற்கு வங்கத்தின் கூச்பெஹர் மாவட்டத்தில் வசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com