ராபர்ட் வதேராவுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில்


காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்களில் தரகுத் தொகை பெற்றதாக எழுந்த சந்தேகத்திலும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள சட்டவிரோத சொத்து விவரங்களை அறியும் முயற்சியாகவும் இந்த சோதனை நடைபெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்கையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜவுக்கு தோல்வி ஏற்படவுள்ளது என்ற பதற்றத்தின் காரணமாக அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தில்லி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
ராபர்ட் வதேராவின் நிறுவனங்களில் பணியாற்றும் 2 ஊழியர்கள், மற்றொரு நபர் ஆகிய மூவருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 
இந்த மூன்று நபர்களும், பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்களில் தொடர்ச்சியாக தரகுத் தொகை பெற்று வந்ததாகவும், அதை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான புதிய ஆதாரங்கள் சோதனையின்போது சிக்கியுள்ளன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் சோதனை நடத்தப்பட்டவர்களின் பெயர், எந்தெந்த இடங்களில் சோதனை நடைபெற்றது போன்ற தகவல்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதேசமயம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் முறைகேட்டு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மெஷெலை, துபையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் சமயத்தில், வதேராவுடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது. 
வத்ரா தரப்பு குற்றச்சாட்டு: ராபர்ட் வதேராவுக்கு தெரிந்தவர்ளுக்கு சொந்தமான இடங்களில், வாரண்ட் எதையும் காண்பிக்காமல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியதாக அவரது வழக்குரைஞர் சுமன் ஜோதி கேதான் குற்றம்சாட்டினார். ஆதாரம் என்ற பெயரில் புதிய புனைவுகளை அமலாக்கத்துறையினர் உருவாக்கும் வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com