ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட்; துணை முதல்வர் சச்சின் பைலட்: காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

ராஜஸ்தான் முதல்வராக அஷோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட்; துணை முதல்வர் சச்சின் பைலட்: காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

புது தில்லி: ராஜஸ்தான் முதல்வராக அஷோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையின் 199 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆட்சி அமைக்க 101 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 73 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களிலும், சுயேச்சை மற்றும் இதர கட்சிகள் 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இந்த மாநிலத்தில் பாஜகவும், காங்கிரஸும் மாறிமாறி ஆட்சி அமைப்பது வழக்கமாக உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக பதவியேற்கப் போவது  யார் என்பது குறித்து முடிவு செய்யும், தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் புதன்கிழமையன்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. 

இதில் முதல்வர் பதவிக்கு முதன்மை போட்டியாளர்களான முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் ராகுல் காந்திக்கு நெருக்கனமானவருமான சச்சின் பைலட் இருவரும் தத்தமது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர். 

இவர்கள் இருவருக்குமே உறுப்பினர்களின் சரிசமமான ஆதரவு இருப்பதால், ஒருமனதாக முடிவு எடுத்து கட்சித் தலைமைக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 

அதேபோல இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான வேணுகோபால் சம்மந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசி கருத்துக்களை கேட்டறிந்து உள்ளதாகவும், பின்னர் அதனைத் தொகுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்ப உள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ராகுல் காந்தி ஓர் முடிவு எடுக்கும் பட்சத்தில் அடுத்த கூட்டமானது யார் முதல்வர் என்பதை அறிவிக்கும் விதமாக அமையும்.  

இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வராக அஷோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த தகவலை தில்லியில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான வேணுகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இதன்மூலம் மூன்று நாட்களாக நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்ததுடன், இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் விதமாகவும் காங்கிரஸ் மேலிடம் ஒரு முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com