முத்தலாக் மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகம் 

இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமை தொடர்பான முத்தலாக் மசோதா மக்களவையில் மீண்டும் திங்களன்று அறிமுகம் செய்யப்பட்டது.  
முத்தலாக் மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகம் 

புது தில்லி: இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமை தொடர்பான முத்தலாக் மசோதா மக்களவையில் மீண்டும் திங்களன்று அறிமுகம் செய்யப்பட்டது.    

முத்தலாக்கை தடை செய்யும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்திற்கு  மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. இச்சட்டத்தின்படி தொடர்ந்து மூன்று முறை தலாக் கூறி மனைவி விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். இது தவிர கடிதம், மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு வழிகள் மூலம் முத்தலாக் கூறுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். 

அதே நேரத்தில் இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்கும் பிரிவைச் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், அந்தப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியும்.

முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்ட மசோதா, மக்களவையில் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேறிவிட்டது. அதே நேரத்தில் மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

மாநிலங்களவையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், திருத்தங்களுடன் கூடிய மசோதாவை மீண்டும் மக்களைவைக்கு அனுப்பப்பட்டு அங்கு நிறைவேற்றப்படும்.

இந்நிலையில் இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமை தொடர்பான முத்தலாக் மசோதா மக்களவையில் மீண்டும் திங்களன்று அறிமுகம் செய்யப்பட்டது. 

ரஃபேல் விவகாரம், மேகேதாட்டு மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ், அதிமுக மற்றும் தெலுங்கு தேச உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மசோதாவை அறிமுகம் செய்தார்.

காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூறிய கருத்துக்களுக்கு, ரவிசங்கர் பிரசாத் பதிலளித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com