நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிப்பா?: அமைச்சர் பியூஷ் கோயல் மறுப்பு

நிலக்கரி பற்றாக்குறையால் நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறான தகவல் என்று மத்திய ரயில்வே மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிப்பா?: அமைச்சர் பியூஷ் கோயல் மறுப்பு

நிலக்கரி பற்றாக்குறையால் நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறான தகவல் என்று மத்திய ரயில்வே மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்துள்ள அவர், வதோதராவில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாட்டில் உள்ள எந்த அனல் மின் நிலையங்களிலும் மின்சார உற்பத்தி குறையவில்லை. அங்கு நிலக்கரி கையிருப்பும் போதுமான அளவுக்கு உள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 2.2 கோடி டன் நிலக்கரியை அனல் மின் நிலையங்களுக்கு அளித்துள்ளது. கடந்த ஆண்டும் இந்த 7 மாதங்களில் அதே அளவுக்கு நிலக்கரி அளிப்பு இருந்தது. எனவே, நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி குறைந்ததாக வெளியான தகவல் தவறானதாகும். நிலக்கரி துறையும், மின்சாரத் துறையும் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன.
அஸ்ஸாம்- அருணாசலப் பிரதேசத்தை இணைக்கும் வகையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ரயில்-சாலை பாலம் கட்டப்பட்டுள்ளது. 4.94 கி.மீ. துரமுள்ள இந்த ரயில்-சாலை பாலம் இந்தியாவிலேயே மிக நீளமானதாகும். தேசிய நல்லாட்சி தினமான வரும் 25-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பாலத்தைத் திறந்து வைக்கிறார். இதன் மூலம் 50 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றார்.
இந்தப் பாலத்துக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அப்போதைய பிரதமர் ஹெச்.டி.தேவெகெளடா அடிக்கல் நாட்டினார். ஆனால், கடந்த 2002-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது தான் இந்தப் பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 16 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் முதல் முறையாக கடந்த 3-ஆம் தேதி ரயில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com