ராமர் கோயில்: அவசர சட்டம் கொண்டு வரப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டும் வகையில் மத்திய அரசால் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டும் வகையில் மத்திய அரசால் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் அந்த அமைப்பின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய பொது செயலாளர் ஜபார்யாப் ஜிலானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மத்திய அரசால் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். அதேபோல், முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு நிறைவேற்றினாலும், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்.
அயோத்தி விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியிடப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இத்தகைய கருத்துகளை உச்சநீதிமன்றம் தனது கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய மூத்த உறுப்பினர் குவாஸிம் ரசூல் இலியாஸ் கூறுகையில், "முத்தலாக் தடை தொடர்பான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது 6 மாதம் மட்டுமே செல்லும். இது சட்டமாக்கப்பட்டால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். அந்த அவசர சட்டத்தை முஸ்லிம் சமூகத்தினருடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற அனுமதிக்கக் கூடாது என்று மதசார்பற்ற கட்சிகளை கேட்டு கொள்கிறோம். அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஏற்கும்' என்றார்.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படும் தேதியை உச்சநீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் வெளியிடவுள்ளது. 
இருப்பினும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வகையில், மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய பாஜக கூட்டணி அரசை ஹிந்து அமைப்புகள் 
வலியுறுத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com