இதுபோன்ற காரணங்களால் தான் பால்ய திருமணங்கள் நடக்கின்றன: ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் 33 சதவீதம் குடும்பத்தின் நிதிநிலைப் பிரச்னை காரணமாகவே நடப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இதுபோன்ற காரணங்களால் தான் பால்ய திருமணங்கள் நடக்கின்றன: ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்


இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் 33 சதவீதம் குடும்பத்தின் நிதிநிலைப் பிரச்னை காரணமாகவே நடப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

சமூக நலத்துறை, குழந்தைகள் நலனுக்கான இந்திய கவுன்சில் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் சார்பில், பால்ய வயது திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கான செயல் திட்டம் குறித்த கருத்தரங்கு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

அப்போது அதுதொடர்பான ஆவணக் கையேடும் வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் 33 சதவீதம் குடும்பத்தின் வறுமை நிலையால் நடப்பதாகவும், பிள்ளைகள் காதலித்து விடுவார்களோ என்ற பயத்தில்  17 சதவீத சிறுவர், சிறுமிகளுக்கு பெற்றோர் பால்ய வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 11 சதவீத திருமணங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் நோய் பாதிப்பு அல்லது பாதுகாப்புக் குறைபாடு போன்ற காரணத்துக்காகவும், 2 சதவீதம் பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்னையாலும், 2 சதவீதம் வரதட்சணைப் பிரச்னையாலும், 2 சதவீதம் பெற்றோரின் முறையற்ற உறவால் ஏற்படும் ஆபத்துகளாலும், 1 சதவீதம் கடனை அடைக்கவும் நடத்தப்படும் பால்ய திருமணங்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் நலனுக்கான இந்தியக் கவுன்சில் பொதுசெயலாளர் கிரிஜா குமார்பாபு, தமிழகப் பிரிவு தலைவர் ஆண்டாள் தாமோதரன், யுனிசெப் நிறுவனத்தின் தமிழக பிரிவு தலைவர் ஜாப் ஜக்காரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சமூக நலத்துறை ஆணையர் வி.அமுதவள்ளி பேசுகையில், 18 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கும், 21 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைப்பது சட்டத்துக்கு எதிரானது. குழந்தை திருமணங்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2017-இல் மட்டும் தமிழகத்தில் 1,636 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்றார்.

இதைத் தொடர்ந்து எம்.பி. நிர்மலா பேசியதாவது:
2011-ஆம் ஆண்டு கணக்குப்படி நாடு முழுவதும் 18 லட்சம் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் அதிகபட்ச திருமணங்கள் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக பிகாரிலும், ராஜஸ்தானிலும் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.

அதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் தமிழகம் உள்ளது. அதிலும் சென்னைதான் மாநிலத்திலேயே முன்னணியில் இருக்கிறது. சென்னையைப் பொருத்தவரை 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரமாக உள்ளது.

அவர்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சட்ட விரோதமாக திருமணம் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. 

குழந்தை திருமணங்களால் பால்ய வயதிலேயே தாய்மை நிலையை அடையும் சிறுமிகளுக்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் உடல்ரீதியான பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. சமீபத்திய கணக்கெடுப்பின் படி, கோவையில் 3025 பேருக்கும், மதுரையில் 2,840 பேருக்கும் குழந்தை திருமணம் நடத்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. குழந்தை திருமணங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com