18% ஜிஎஸ்டி வரம்பில் 99% பொருள்கள்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

99 சதவீத பொருள்களை, 18 சதவீதத்துக்கும் குறைவான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர்
மும்பையில் ரிபப்ளிக் ஊடகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
மும்பையில் ரிபப்ளிக் ஊடகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.


99 சதவீத பொருள்களை, 18 சதவீதத்துக்கும் குறைவான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதன் மூலம் மேலும் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறையும் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. நாட்டின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்த நடவடிக்கையான இதில் 5,12,18,28 சதவீதம் என நான்கு அடுக்காக வரி விதிக்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு பொருள்கள் குறைவான வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி சாத்தியமானது: இந்நிலையில், ரிபப்ளிக் ஊடக நிறுவனம் சார்பில் மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய மாநாட்டில் பிரதமர் மோடி இது தொடர்பாக பேசியதாவது:
நமது நாட்டில் ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதற்கு முன்பு 65 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஜிஎஸ்டி-க்குப் பிறகு 55 லட்சம் புதிய நிறுவனங்கள் வரி வரம்புக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி-யை அமல்படுத்திய பிறகு அதனை தீவிர மாக கண்காணித்தும், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டும் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு அதனை மிகச்சிறந்த முறையில் மேம்படுத்தி வருகிறோம். சிறிய நாடுகளில் கூட வரிச் சீர்திருத்தத்தை அமல்படுத்துவது சவாலான பணி. ஆனால், மிகப்பெரிய நமது தேசத்தில் அதனை சிறப்பாக சாத்தியமாக்கியுள்ளோம்.
வரி குறைக்கப்படும்: 99 சதவீதப் பொருள்களை 18 சதவீதத்துக்கும் குறைவான ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆடம்பரப் பொருள்களுக்கும், உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஜிஎஸ்டி-யை அமல்படுத்த வேண்டும் என்ற பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியது பாஜக அரசுதான். வர்த்தகத்திலும், தொழில்துறையிலும் இருந்த வரி தொடர்பான பல நடைமுறைச் சிக்கல்களுக்கு ஜிஎஸ்டி மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. வரித் துறை சிறப்பாக செயல்பட ஜிஎஸ்டி உதவிகரமாக உள்ளது. நமது பொருளாதாரத்தில் வெளிப்படைத்தன்மை மேம்பட்டுள்ளது.
கடன் மோசடி நடக்காது: நமது நாட்டில் லஞ்ச-ஊழலை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியில் தொழில் நிறுவனங்கள் கடனை திருப்பிச் செலுத்தாதபோது, அதன் உரிமையாளர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறியுள்ளது. வங்கியில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட எந்தத் தொழிலதிபராலும் முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சி அமைத்தபோது 55 சதவீத வீடுகளுக்கு மட்டுமே எரிவாயு இணைப்பு இருந்தது. இப்போது எரிவாயு இணைப்பு இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலைக்கு முன்னேறியுள்ளோம். முந்தைய ஆட்சியில் உள்கட்டமைப்புத் துறையில் போதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை. இப்போதைய அரசு சாலை, ரயில், நீர் வழி, வான் வழிப் போக்குவரத்தை மேம்படுத்தியுள்ளது. புதிய இந்தியாவை படைக்கும் பணி முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நீதி கிடைத்துள்ளது: சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பு (காங்கிரஸ் ஆட்சியில்) யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது நீதி வென்றுள்ளது. சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்றார் மோடி.
ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு ஏதுமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நேரடியாகக் குறிப்பிடாமல் அது குறித்துப் பேசிய மோடி, மத்திய அரசு மீது வேண்டுமென்றே தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி இதுவரை 4 முறை காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. இவை அனைத்திலும் அவர்கள் கூறியது பொய் என்பது நிரூபணமாகியுள்ளது என்றார்.
திட்டங்களுக்கு அடிக்கல்: மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில், தாணே-பிவாண்டி-கல்யாண் பகுதிகளை இணைக்கும் மெட்ரோ 5 வழித்தடம், தஹிசர்-மிரா பாயந்தர் பகுதிகளை இணைக்கும் மெட்ரோ 9 வழித்தடம் ஆகிய திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். 
இதில் தாணே-பிவாண்டி-கல்யாண் வழித்தடமானது ரூ.8,416 கோடி மதிப்பில் 24.9 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ரூ.18,000 கோடியில் 89,771 வீடுகள் கட்டும் திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து மும்பையில் ஹிந்தி திரைத் துறை குழுவினர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். இதில் நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com