ரஃபேல் விவகாரம் குறித்து விவாதிக்க மறுக்கிறது காங்கிரஸ்

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்க மறுத்து காங்கிரஸ் ஓட்டம் பிடிப்பதாக மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் விஜய்
ரஃபேல் விவகாரம் குறித்து விவாதிக்க மறுக்கிறது காங்கிரஸ்


ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்க மறுத்து காங்கிரஸ் ஓட்டம் பிடிப்பதாக மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் விஜய் கோயல் கடுமையாக சாடியுள்ளார். 
ரஃபேல் ஒப்பந்தம், காவிரி நதிநீர் பங்கீடு, ரிசர்வ் வங்கி மற்றும் சிபிஐ உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் அரசு விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் விஜய் கோயல் 
செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 
இதுகுறித்து மக்களவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வந்தது. காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரித்த உச்சநீதிமன்றம் அவை அனைத்தையும் நிராகரித்தது. தற்போது ரஃபேல் விவகாரம் குறித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் காங்கிரஸ் விவாதிக்க மறுத்து ஓட்டம் பிடிக்கிறது. இதுதொடர்பாக மக்களவையில் அரசு விரிவான விவாதம் நடத்த தயாராக இருக்கிறது. 
மத்திய அரசு பிரான்ஸில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து விட்டது. தீர்ப்பு தொடர்பாக, காங்கிரஸிற்கு உண்மையான சந்தேகம் இருக்குமானால், அதுபற்றி மக்களவையில் விவாதித்து விளக்கம் அளிக்க அரசு தயாராகவே உள்ளது. 
ஆனால் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தேவையில்லாத விவகாரங்கள் குறித்துப் பேசி வருகிறார்களே தவிர, சரியான விவாதங்களை முன்வைக்க அக்கட்சி தயாராக இல்லை என்று அமைச்சர் கூறினார்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது ஒரு ரஃபேல் போர் விமானத்தை ரூ.526 கோடிக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில், தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒரு போர் விமானத்துக்கு ரூ.1670 கோடி வீதம் மொத்தம் 36 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. ஆனால் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என அரசு கூறியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com