சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து சஜ்ஜன் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார்,  உச்ச நீதிமன்றத்தில்
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து சஜ்ஜன் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்


புதுதில்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார்,  உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் பாதுகாவலர்கள் இருவரும் சீக்கியர்கள் என்பதால், தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

அதில், மேற்கு தில்லியின் ராஜ்நகர் பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு எதிராக ஜானக்புரி, விகாஸ்புரி ஆகிய காவல் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணை நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் கவுன்சிலர் பல்வான் கோகர் உள்ளிட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை(டிச.17) தீர்ப்பளித்தது. அவர், டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் பல்வான் கோகர், முன்னாள் கடற்படை அதிகாரி கேப்டன் பக்மால் உள்பட 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனைகளையும் தில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கும், சஜ்ஜன் குமார் தனது பிள்ளைகளுக்கு சொத்துகளை பிரித்துக் கொடுப்பது உள்ளிட்ட குடும்ப விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்கும் கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால், ஜனவரி 30-ஆம் தேதி வரை அவர் அவகாசம் கேட்டு தில்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்தநிலையில், தில்லி உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து சஜ்ஜன் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவரது வழக்குரைஞர் பூல்கே கூறுகையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஏற்கெனவே தங்களிடம் விசாரிக்காமல் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது எனக் கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதனுடன் சேர்ந்து எங்கள் மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்துள்ளோம் எனக் கூறினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, தில்லியில் உள்ள சுல்தான்புரியில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியது, சுர்ஜித் சிங் என்ற சீக்கியரைக் கொலை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை இவர்கள் எதிர்கொண்டுள்ளனர். 

சஜ்ஜன் குமார் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com