விவசாயிகளுக்கு நல்ல அறிவிப்புக் காத்திருக்கிறது: அது நிச்சயம் வேளாண் கடன் தள்ளுபடியல்ல

மத்திய அரசின் சில தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியாவில் பொதுமக்கள் பலரும் விரக்தியில் இருக்கும் நிலையில், விவசாயிகளின் மனநிலை வார்த்தைகளில் வடிக்க முடியாத நிலையில் உள்ளது.
விவசாயிகளுக்கு நல்ல அறிவிப்புக் காத்திருக்கிறது: அது நிச்சயம் வேளாண் கடன் தள்ளுபடியல்ல


புது தில்லி: மத்திய அரசின் சில தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியாவில் பொதுமக்கள் பலரும் விரக்தியில் இருக்கும் நிலையில், விவசாயிகளின் மனநிலை வார்த்தைகளில் வடிக்க முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு, விவசாயிகளுக்கு மிகச் சிறப்பான ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன.

நாட்டின் எந்த மூலையில் இருக்கும் விவசாயிகளுக்கும் நிம்மதி தரும் திட்டமாக அது இருக்கும் என்றும், ஆனால் அது நிச்சயம் வேளாண் கடன் தள்ளுபடியல்ல என்றும் திட்டவட்டமாகக் கூறப்படுகிறது.

ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்ட பிறகு, இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் பாஜக நடத்தும் மிகப்பெரிய பேரணியையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இந்த திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றே கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். அதில் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன், பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட விவசாய திட்டங்கள் குறித்தும் விவாதித்து மிகச் சிறந்த திட்டம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, மத்தியப் பிரதேசத்தில் செயல்படுத்தப்படும் பவந்தார் திட்டத்தைப் போல, அடிப்படை ஆதார விலைக்கும், சந்தை விலைக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மத்திய அரசு விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவது போன்ற ஒன்றாக அமையலாம் என்றும், அல்லது ஜார்க்கண்டில் செயல்படுத்தப்படும் எப்போதும் நிரந்தரமான ஒரு மானியத் தொகையை விவசாயிகளுக்கு வழங்குவது போன்ற திட்டமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், கிஸான் கடன் அட்டையின் கடன் பெறும் தொகையின் அளவை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com