2019 மக்களவைத் தேர்தலுக்கு பின் பாஜக இருக்கும் இடம் தெரியாது: மம்தா கடும் தாக்கு

'2019 மக்களவைத் தேர்தலுக்கு பின், தொலைநோக்கி கொண்டு பார்த்தால் கூட பாஜக இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாது' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கியுள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலுக்கு பின் பாஜக இருக்கும் இடம் தெரியாது: மம்தா கடும் தாக்கு

'2019 மக்களவைத் தேர்தலுக்கு பின், தொலைநோக்கி கொண்டு பார்த்தால் கூட பாஜக இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாது' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கியுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநாடு, ஹெளராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்றுப் பேசியதாவது:
நாட்டில் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் தோல்வியுற்றதால் ஏற்பட்ட விரக்தியிலும் பயத்திலும் எதிர்மறையான - எதற்கும் உதவாத ஒரு பட்ஜெட்டை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மக்கள் விரோத அரசு, ஆட்சியில் இருப்பதற்கு தகுதியற்றது.
பாஜகவை வழியனுப்புவதற்கான மணியோசை ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு பின், தொலைநோக்கி கொண்டு பார்த்தால் கூட பாஜகவை கண்டுபிடிக்க முடியாது.
மேற்கு வங்கத்தில் மாநில அரசை எதிர்ப்பதில், மார்க்சிஸ்ட்டும், பாஜகவுக்கும் ஒரு புரிதலுடன் செயல்படுகின்றன. அதேபோல, மார்க்சிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் நட்பு பாராட்டுகிறது.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதிலிருந்து அக்கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மத நல்லிணக்கம், ஜனநாயகம், மனிதாபிமானம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீதே மேற்கு வங்க மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றார் அவர்.
முகுல் ராய் மீது தாக்கு: மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் திரிணமூல் கட்சி எம்.பி.யாகவும் இருந்த முகுல் ராய், அண்மையில் பாஜகவில் இணைந்தார். தனது எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்தார்.
அவரது பெயரை குறிப்பிடாமல் பேசிய மம்தா, 'திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஒன்றிரண்டு துரோகிகள் இருந்தனர். தற்போது அவர்கள் இல்லாதது, நமக்கு நன்மையே. கட்சியைவிட்டு வெளியேறியமைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
மேலும் பேசிய அவர், 'எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்து விட்டேன். கட்சியைப் பொருத்தவரை, தலைவர்களைவிட தொண்டர்களுக்கே முன்னுரிமை அளிப்பேன்' என்றார்.
முன்னதாக, மேற்கு வங்கத்திலுள்ள உளுபேரியா மக்களவைத் தொகுதிக்கும், நவோபரா பேரவைத் தொகுதிக்கும் கடந்த திங்கள்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது. வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், இரு தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
பேரவையில் விமர்சனம்: இதனிடையே, மேற்கு வங்க சட்டப் பேரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை பேச எழுந்தபோது, மார்க்சிஸ்ட் உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, இரு கட்சிகளையும் மம்தா கடுமையாக சாடினார்.
அவர் பேசுகையில், 'மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர்கள் எந்த செல்வாக்கும் இல்லாதவர்கள். அவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியுடன் சேர்ந்துகொண்டு மாநில அரசை எதிர்க்கின்றனர். 
மேற்கு வங்க அரசின் கடன் அதிகரித்துவிட்டதாக குறைகூறும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள், பஞ்சாபிலும், கேரளத்திலும், ராஜஸ்தான்-மத்தியப் பிரதேசத்திலும் கடன் நிலை எவ்வாறு உள்ளது என்பதை பார்க்க வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com