Enable Javscript for better performance
அயோத்தி வழக்கு: மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    அயோத்தி வழக்கு: மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

    By DIN  |   Published on : 09th February 2018 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme court

    சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில வழக்கின் விசாரணையை, வரும் மார்ச் 14-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
    உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. அப்போது, அந்த நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா அமைப்பு, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய மூன்று அமைப்புகளும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளும்படி அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    அந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தன. 
    அப்போது, சன்னி வக்ஃபு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞரும், காங்கிரஸ் முன்னாள் அமைச்சருமான கபில் சிபல், வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் இறுதி விசாரணை, பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்திருந்தது.
    அதன்படி, அந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
    இந்த வழக்கில் மூன்று தரப்பினரும் மாறி மாறி மேல்முறையீடு செய்துள்ளனர். அரசியல் முக்கியத்துவம் பெற்ற இந்த வழக்கு, "நிலப் பிரச்னை' என்ற அடிப்படையில் மட்டுமே விசாரிக்கப்படும். உச்ச நீதிமன்றத்தில் பல சிறிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை விசாரிப்பதற்கு தினமும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்குவது, அவற்றுக்கு தீர்வுகாண்பதற்கு உதவிகரமாக இருக்கும். எனவே, இந்த வழக்கை தினசரி அடிப்படையில் விசாரிக்க முடியாது. வழக்கமான முறையிலேயே விசாரணை நடைபெறும்.
    இதற்கு முன்பு, இந்த வழக்கு தொடர்பாக, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் மொழிபெயர்ப்பை 14 நாள்களில், மனுதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு உதவும் வகையிலான தகவல்கள் வட்டார நூல்களில் இருந்தால், அதன் சாரம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும்.
    இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராச் சேர்த்துக் கொள்ளும்படி திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல், எழுத்தாளர் கிரண் நாகர்கர் ஆகியோர் விடுத்த கோரிக்கை குறித்து இறுதியில் முடிவு செய்யப்படும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் மார்ச் 14-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai