Enable Javscript for better performance
அறிவுசார் சொத்துரிமை தரவரிசை: இந்தியாவுக்கு 44-ஆவது இடம்- Dinamani

சுடச்சுட

    

    அறிவுசார் சொத்துரிமை தரவரிசை: இந்தியாவுக்கு 44-ஆவது இடம்

    By DIN  |   Published on : 09th February 2018 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச அளவில் அறிவுசார் சொத்துரிமை நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்கும் நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமெரிக்க தொழில் வர்த்தக சபை வெளியிட்டுள்ளது. அதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள 50 நாடுகளில் இந்தியா 44-ஆவது இடத்தில் உள்ளது.
    முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது சற்று முன்னேற்றம் என்றாலும்கூட, அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் இந்தியா இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளதாக அமெரிக்க தொழில் வர்த்தக சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    புதிய கண்டுபிடிப்புகள், உற்பத்திப் பொருள்கள், சேவைகள், தொழில்நுட்பங்கள் என பல்வேறு விஷயங்களுக்கு அறிவுசார் சொத்துரிமையின் கீழ் காப்புரிமைப் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பொருளையோ அல்லது அதன் குறியீடுகளையோ வேறு எவரும் அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். அதேபோன்று காப்புரிமை செய்யப்பட்ட பிரபலமான பொருளின் பெயரை சற்று திருத்தி போலியாகப் பொருள்கள் தயாரித்து விற்கவும் முடியாது.
    உலக நாடுகள் அனைத்திலும் பல்வேறு பொருள்களுக்கு இவ்வாறு அறிவுசார் சொத்துரிமை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை முன்னணி நிறுவனங்களைத் தவிர, சிறு தொழிலகங்கள் எதுவும் தங்களது உற்பத்திப் பொருள்களை காப்புரிமை செய்வதில்லை.
    இதன் காரணமாக சந்தையில் பல்வேறு போலி பொருள்கள் உலவுகின்றன. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் பயனாக தற்போது காப்புரிமை தொடர்பான விழிப்புணர்வு ஓரளவு உருவாகியிருப்பதாகத் தெரிகிறது.
    இந்தச் சூழலில், அமெரிக்க தொழில் வர்த்தக சபை சார்பில் அறிவுசார் சொத்துரிமை தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 50 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. இந்தியா அப்பட்டியலில் 44-ஆவது இடம் பிடித்திருந்தது. காப்புரிமை தொடர்பான நடவடிக்கைகளில் 8.75 புள்ளிகளை இந்தியா பெற்றிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
    இந்த விஷயத்தில் இந்தியா இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா 37.98 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பிரிட்டன் 37.97 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் தரவரிசைப் பட்டியலில் உள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai