Enable Javscript for better performance
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவை: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் அமளி- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவை: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் அமளி

    By DIN  |   Published on : 09th February 2018 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    parliment

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி மக்களவையில் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பி.க்கள்.

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் அல்லது சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த மாநில எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
    வழக்கத்துக்கு மாறாக, ஆந்திரத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரே, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
    மக்களவையில், ஆந்திர மாநில விவகாரத்தை எழுப்பி மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர். 
    அப்போது, மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சரும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் உறுப்பினருமான ஒய்.எஸ்.செளதரி, ஆந்திர மாநிலப் பிரச்னைக்கு மத்திய நிதியமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றார். மத்திய அமைச்சர் ஒருவரே நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியது அரிய நிகழ்வாகும். அவர் கூறியதாவது:
    போலாவரம் நீர்ப்பாசனத் திட்டம், கடப்பாவில் எஃகு தொழிற்சாலை அமைக்கும் திட்டம், ஆந்திர மாநிலத்துக்கென விசாகப்பட்டினத்தில் தனி ரயில்வே மண்டலம் அமைக்கும் திட்டம், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், இவை யாவும் நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 15 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்றார் அவர்.
    மாநிலங்களவையில்...: மாநிலங்களவையிலும் இதே பிரச்னையை எழுப்பி ஆந்திர மாநில எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அங்கும் இதே கோரிக்கையை அமைச்சர் ஒய்.எஸ்.செளதரி முன்வைத்தார். அவர் பேசியதாவது:
    ஆந்திர மாநிலம் எப்படி நியாயமற்ற முறையில், பிரிக்கப்பட்டது என்பதை இந்த நாடாளுமன்றம் நன்கு அறியும். கடந்த மூன்றரை ஆண்டுகளில், ஆந்திர மறுசீரப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படுள்ள அம்சங்கள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தச் சட்டம் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டதற்கு தேசியக் கட்சிகளான காங்கிரஸýம், பாஜகவும்தான் காரணம். மத்திய அரசு விரும்பினால், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து, எஃகு தொழிற்சாலைத் திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.
    அதற்குப் பதிலளித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயல், இந்தக் கோரிக்கைகளுக்கு ஜேட்லி பதிலளிப்பார் என்று உறுதியளித்தார்.
    அதைத் தொடர்ந்து, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி விஜய் சாய் ரெட்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர் கே.வி.பி.ராமச்சந்திர ராவும் "ஆந்திரத்தைக் காப்பாற்றுங்கள்' என்ற வாசகத்துடன் கூடிய பதாகையை ஏந்தியபடி அவையின் நடுப்பகுதியில் கோஷமிட்டார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை 90 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai