Enable Javscript for better performance
ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம்: பயங்கரவாதி மீட்பு எதிரொலி- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம்: பயங்கரவாதி மீட்பு எதிரொலி

    By DIN  |   Published on : 09th February 2018 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீரில் இரு போலீஸாரைச் சுட்டுக் கொன்ற லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள், தங்கள் கூட்டாளி ஒருவரையும் மீட்டுச் சென்ற சம்பவத்தை அடுத்து மாவட்ட சிறைத் துறை டிஜிபி எஸ்.கே.மிஸ்ரா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது நவீத் ஜட் என்ற அபு ஹன்சுல்லா (22) உள்பட 6 சிறைக் கைதிகளை மருத்துவப் பரிசோதனைக்காக ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் (எஸ்.எம்.எச்.எஸ்.) மருத்துவமனைக்கு போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனர். மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து கைதிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தபோது, திடீரென அப்பகுதியில் மறைந்திருந்த இரு லஷ்கர் பயங்கரவாதிகள் போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு, நவீத் ஜட்டுடன் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இரு போலீஸார் உயிரிழந்தனர்.
    பகல் நேரத்தில் பாதுகாப்பு அதிகமுள்ள முக்கிய மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் மீதும், சிறைத் துறையினர் மீதும் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.
    மருத்துவமனைக்கு நவீத் அழைத்து வரப்படுவது குறித்து ஏற்கெனவே தெரிந்து கொண்டு பயங்கரவாதிகள் அங்கு முன்னதாக வந்து பதுங்கியிருந்துள்ளனர். நவீத் கொண்டு வரப்படும் தகவல் எப்படி கசிந்தது என்றும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் நவீத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஏன்? என்றும் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
    இந்நிலையில், மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பயங்கரவாதி நவீத் ஜட் தப்பிச் சென்றது குறித்த சம்பவம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக, மாநில சிறைத் துறை டிஜிபி எஸ்.கே. மிஸ்ராவை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க முடிவெடுக்கப்பட்டது. அவருக்கு காவலர் வீட்டு வசதித் துறைத் தலைவர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    சிறைத் துறையின் புதிய டிஜிபி-யாக ஐபிஎஸ் அதிகாரியான தில்பக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 1987-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான தில்பக் சிங், ஜம்மு-காஷ்மீர் பொதுமக்கள் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மைப் பிரிவு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai