Enable Javscript for better performance
டோக்கா லாம் பகுதியில் முன்பு இருந்த நிலையே நீடிக்கிறது: சுஷ்மா ஸ்வராஜ்- Dinamani

சுடச்சுட

    

    டோக்கா லாம் பகுதியில் முன்பு இருந்த நிலையே நீடிக்கிறது: சுஷ்மா ஸ்வராஜ்

    By DIN  |   Published on : 09th February 2018 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sushmaswaraj

    டோக்கா லாம் பகுதியில் முன்பு இருந்த நிலையே நீடிக்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
    சிக்கிம் மாநிலத்தில் இந்தியா, பூடான், திபெத் ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் டோக்கா லாம் பகுதி உள்ளது. திபெத்தை ஏற்கெனவே ஆக்கிரமித்து தங்கள் நாட்டின் பகுதியாக அறிவித்துவிட்ட சீனா, டோக்கா லாம் பகுதிக்குள் அங்கு அத்துமீறி நுழைந்து சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
    அப்பகுதிக்குள் கடந்த ஜூன் மாதம் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், இந்திய ராணுவம் அமைத்திருந்த பதுங்கு குழிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். எனினும், அவர்களை முன்னேறவிடாமல் இந்திய ராணுவம் தடுத்து விட்டது. கூடுதலாக இந்திய வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சீனாவில் படைகளைக் குவித்தது. இதனால் டோக்கா லாம் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. சுமார் இரண்டரை மாதங்கள் பிரச்னை நீடித்த நிலையில், இந்தியாவும், சீனாவும் ஒரே நேரத்தில் டோக்கா லாம் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற்றதால் பதற்றம் தணிந்தது. எனினும், டோக்கா லாம் பகுதியில் சீன ராணுவம் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எழுத்து மூலம் அளித்த பதிலில், "இந்தியா-சீனா இடையே ராஜீயரீதியில் நடைபெற்ற பேச்சுகளுக்குப் பிறகு, இரு நாட்டு ராணுவ வீரர்களும் டோக்கா லாம் பகுதியில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியேறி விட்டனர். அப்பகுதியில் இதற்கு முன்பு இருந்த நிலையே இப்போது நீடிக்கிறது. அங்கு வேறு எந்த புதிய நிகழ்வுகளும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
    அருணாசலப் பிரதேச எல்லைக்குள் சாலை அமைக்க சீனத் தரப்பு முயற்சித்து வருவதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங், "அருணாசலப் பிரதேச எல்லையில் சீனாவைச் சேர்ந்த மூவர் வந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டத்தை ராணுவ வீரர்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக சீனத் தரப்புக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பணிகளை நிறுத்திக் கொண்ட சீனத் தரப்பு, அந்த மூவரையும் தங்கள் எல்லைக்குள் திரும்ப அழைத்துக் கொண்டது.
    இரு தரப்புக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தப்படி பிரம்பபுத்திரா, சட்லஜ் நதிகளின் வெள்ளப் பெருக்கு காலத்தில் நீர்வரத்து குறித்த தகவல்களை சீனா நமது நாட்டுக்கு அளித்து வருகிறது' என்றார் அவர்.
    டோக்கா லாம் கூட்டம் ரத்து: இதனிடையே, டோக்கா லாம் விவகாரம் தொடர்பாக 4 சாட்சிகளிடம் விசாரிப்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ அதிகாரி, முன்னாள் வெளியுறவுச் செயலாளர், முன்னாள் தூதர், செயற்கைக்கோள் புகைப்படத் துறை வல்லுநர் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுவதாக இருந்தது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உறுப்பினராக உள்ளார்.
    பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளதால், இக்கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்று நிலைக்குழுவில் இடம் பெற்றிருந்த எம்.பி.க்களின் வேண்டுகோள் விடுத்தனர். அதனை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai