Enable Javscript for better performance
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்கிறது காங்கிரஸ்: ரஃபேல் விவகாரத்தில் ஜேட்லி பதிலடி- Dinamani

சுடச்சுட

    

    நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்கிறது காங்கிரஸ்: ரஃபேல் விவகாரத்தில் ஜேட்லி பதிலடி

    By DIN  |   Published on : 09th February 2018 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Arun Jaitley

    ரஃபேல் போர் விமானங்களின் கொள்முதல் விவரங்களைப் பகிரங்கப்படுத்தக் கோருவதன் மூலம் காங்கிரஸ் கட்சி நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டிருப்பதை உணர முடிகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
    ஆளும் பாஜக அரசு மீது அடிப்படை ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் புதிய உத்தியை தற்போது காங்கிரஸ் கையில் எடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
    ரஃபேல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் புகார்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இக்கருத்துகளை மக்களவையில் அவர் தெரிவித்தார்.
    பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் மத்திய பாஜக அரசு விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் புதன்கிழமை நடைபெற்றபோது, மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி பேசுகையில், ரஃபேல் விவகாரத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய பாஜக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.
    இதற்கு பதலளிக்கும் விதமாக மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது அருண் ஜேட்லி பேசியதாவது: போர் விமானத்தின் பகுதி வாரியான கொள்முதல் செலவை வெளிப்படையாக அறிவித்தால், அது எந்த வகையான விமானம்?, எவ்வாறு செயல்படும்?, எத்தகைய திறனுடையது? என்பதை எதிரிகள் அறிந்துகொள்ள முடியும். அதையும் மீறி அத்தகவல்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள அக்கட்சி முடிவு செய்துவிட்டது என்றார் அவர்.
    மேலும், ஆளும் பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் உத்தியை தற்போது காங்கிரஸார் செயல்படுத்தி வருகின்றனர் என்றும் ஜேட்லி கூறினார். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மக்களவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
    ராகுல் விமர்சனம்: இதனிடையே, ரஃபேல் விவகாரம் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி வியாழக்கிழமை பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கோ, ரஃபேல் கொள்முதல் மீதான விமர்சனங்களுக்கோ இதுவரை எந்த பதிலையும் பிரதமர் மோடி தெரிவிக்காமல் இருப்பது சந்தேகத்துக்கு இடமளிப்பதாக உள்ளது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai