Enable Javscript for better performance
பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணி: சோனியா காந்தி அழைப்பு- Dinamani

சுடச்சுட

  

  பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணி: சோனியா காந்தி அழைப்பு

  By DIN  |   Published on : 09th February 2018 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sonia-rahul

  அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க புதிய கூட்டணியை அமைக்க சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
  காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் காந்தியின் கனவை நனவாக்குவோம் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை ஆவேச உரையாற்றியுள்ள சூழலில், சோனியாவின் இந்த அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
  நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, தில்லியில் தன் கட்சி எம்.பி.க்களிடையே வியாழக்கிழமை பேசினார். அப்போது பாஜக மீதும், மோடி அரசு மீதும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சோனியா காந்தி பேசியதாவது:
  நமது கட்சியின் வெற்றி வாய்ப்புகளை புதுப்பித்துக் கொள்வதற்கான நடைமுறை ஏற்கெனவே தொடங்கி விட்டது. அதற்கு உதாரணமாக குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கடந்த முறையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றதையும், ராஜஸ்தான் இடைத்தேர்தலில் மிப்பெரிய வெற்றிகளை கட்சி அடைந்ததையும் கூறலாம். இது, வீசும் காற்றின் திசை மாறி வருவதைக் காட்டுகிறது. விரைவில் கர்நாடக பேரவைத்தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் புத்துயிர் பெற்றுள்ளதை நிரூபிக்கும்.
  மத்தியில் ஆளும் மோடி அரசானது நாட்டின் யதார்த்த நிலையை உணரவில்லை. இது மக்களவையில் பிரதமர் புதன்கிழமை ஆற்றிய உரையில் இருந்து நிரூபணமாகியுள்ளது.
  நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பு இல்லாத சூழலில் இருப்பதாக உணர்கின்றனர். அவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். தலித்துகளும் பெண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
  குறுகிய அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக சமூகத்தைப் பிளவுபடுத்தும் நோக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு திட்டமிட்டு வன்முறைகளைத் தூண்டி விடுகிறது.
  இதை நாம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்ற உத்தரப் பிரதேசத்திலும் குஜராத்திலும் கண்டோம். அடுத்த சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்க உள்ள கர்நாடக மாநிலத்திலும் இதை நாம் காணும் நிலை ஏற்படலாம்.
  இவ்வாறு மக்களைப் பிளவுபடுத்துவது என்பது ஜனநாயகத்தில் குற்றமாகும். எனினும், ஆட்சியாளர்கள் இதை வேறு விதமாகப் பார்க்கின்றனர்.
  மோடி அரசு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜனநாயகத்தின் அடிப்படைகளாக விளங்கும் நாடாளுமன்றம், நீதித்துறை, ஊடகங்கள், சமூல நல அமைப்புகள் ஆகியவை தாக்குதலுக்கு ஆளாகின. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களின் பெயரை மோடி அரசு புதிதாக மாற்றி விட்டது. இது "அதிகபட்ச விளம்பரம் - குறைந்தபட்ச ஆட்சி நிர்வாகம்' என்ற விளையாட்டாகவே தோன்றுகிறது.
  மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. எனினும், அது கடந்த 2004-இல் நடைபெற்றதைப் போல் முன்கூட்டியே நடத்தப்படலாம். எனவே, கட்சித் தலைவர்கள் அனைவரும் மக்களவைத் தேர்தலுக்குத் தயாராக இருக்க வேண்டும். மேலும், மோடி அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை நமது கட்சிக்கான ஆதரவாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
  நாடாளுமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில் நான் காங்கிரஸ் தலைவர் மற்றும் மற்ற சகாக்களுடன் இணைந்து அடுத்த தேர்தலில் பாஜக தோல்வியடைவதையும், இந்தியா ஜனநாயக ரீதியிலான அனைவரையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற, பொருளாதார, முன்னேற்றப் பாதையில் செல்வதையும் உறுதிப்படுத்த நான் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவேன் என்றார் சோனியா.
  தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி ஒன்றுக்குத் தலைமை தாங்க முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், கூட்டணிக்கான அழைப்பை சோனியா விடுத்துள்ளார்.
  சரத் பவார் கடந்த குடியரசு தினத்தன்று மும்பையில் "அரசியல்சாசனத்தைக் காப்போம்' என்ற பெயரிலான பேரணியை நடத்தினார். அதில் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதேவேளையில் மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவராக முன்னிறுத்த அவரது திரிணமூல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

  எனக்கும் ராகுல்தான் "பாஸ்'!

  காங்கிரஸ் எம்.பி.க்களிடையே சோனியா பேசும்போது "எனக்கும் ராகுல்தான் தலைவர்' என்று தெரிவித்தார். அவர் இதுதொடர்பாகக் கூறியதாவது:
  நாம் அனைவரும் இணைந்து ஒரு புதிய காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்துள்ளோம். எனவே அவருக்கு உங்கள் சார்பிலும் என் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவர்தான் இப்போது எனக்கும் தலைவர். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நீங்கள் (எம்.பி.க்கள்) அனைவரும் ராகுல் காந்தியுடன் இணைந்து அர்ப்பணிப்பு, விசுவாசம் மற்றும் ஆர்வத்துடன் பாடுபடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
  நமது கட்சியின் வெற்றி வாய்ப்புகளை புதுப்பித்துக் கொள்வதற்காக அவரது தலைமையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அந்த நடவடிக்கை தொடங்கியுள்ளது என்று சோனியா குறிப்பிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai