Enable Javscript for better performance
வளர்ச்சி தராத இடதுசாரி ஆட்சியை புறக்கணியுங்கள்: திரிபுராவில் மோடி பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    வளர்ச்சி தராத இடதுசாரி ஆட்சியை புறக்கணியுங்கள்: திரிபுராவில் மோடி பிரசாரம்

    By DIN  |   Published on : 09th February 2018 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

    திரிபுரா மாநில சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அந்த மாநிலத் தலைநகர் அகர்தலாவில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி.

    "திரிபுரா மக்களை இடதுசாரி அரசு அடிமைத்தனத்துக்கு ஆளாக்கி விட்டது. அந்த அரசை வாக்காளர்கள் தூக்கியெறிய வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
    வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் தற்போது மாணிக் சர்க்கார் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப் பேரவைக்கு வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    இந்நிலையில், திரிபுராவின் சோனாமுரா மற்றும் கைலாஷஹர் ஆகிய நகரங்களில் பாஜக சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
    திரிபுராவில் உள்ள மக்கள் ஆளும் கம்யூனிஸ்டுகளால் அச்சுறுத்தப்படுகின்றனர். ரேஷன் அட்டை போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இங்குள்ள மக்கள் ஆளுங்கட்சி அலுவலகத்தை நாட வேண்டியுள்ளது. யாராவது கொலை செய்யப்பட்டால் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்புதல் இல்லாமல் போலீஸார் வழக்கைப் பதிவு செய்வதில்லை. இங்குள்ள கம்யூனிஸ்டுகள் சாமானிய மக்களை எல்லா விஷயத்துக்கும் தங்களைச் சார்ந்திருக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இது அடிமைத்தனத்தின் புதிய முகமாகும்.
    இடதுசாரி ஆட்சியின்கீழ் திரிபுராவில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. மக்கள் மாணிக்கக் கற்களை தங்கள் தலைவிதியை மாற்றுவதற்காக அணிகின்றனர். ஆனால் இந்த மாணிக்கம் (முதல்வர் மாணிக் சர்க்கார்) மாநில மக்களுக்கு செழிப்பைக் கொண்டுவரத் தவறிவிட்டார். எனவே வாக்காளர்கள் மாணிக் சர்க்கார் அரசைத் தூக்கியெறிய வேண்டும்.
    மாநிலத்தில் வளர்ச்சியையும் செழிப்பையும் ஏற்படுத்துவதற்கு நெடுஞ்சாலைகள், இணையதள வசதி, சாலைகள், விமானப் போக்குவரத்து ஆகியவற்றை மேம்படுத்தும் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும். திரிபுராவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவோம்.
    இங்கு ரோஸ்வேலி சீட்டு நிதி நிறுவன மோசடி நடைபெற்றுள்ளது. மக்களிடம் உள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களைப் போக்க மாநில அரசு எதுவும் செய்யவில்லை. நாங்கள் (பாஜக) ஆட்சிக்கு வந்தால் இந்த முறைகேட்டில் ஈடுபட்டோருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்குவோம்.
    "கிழக்கை நோக்கி' கொள்கையின் ஒரு பகுதியாக வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் மோடி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai