பீர் சாப்பிட்டுக் கொண்டே சந்திக்கலாமா? : கோவா முதல்வருக்கு அழைப்பு விடுத்த பெண் எழுத்தாளர்! 

மாநிலத்தில் பெண்கள் கூட பீர் குடிக்கத் தொடங்கி விட்டனர் என்று கருத்து தெரிவித்த கோவா மாநில முதல்வருக்கு பதிலளிக்கும் விதமாக, பீர் சாப்பிட்டுக் கொண்டே சந்திக்கலாம் என்று அவருக்கு பெண் எழுத்தாளர் ...
பீர் சாப்பிட்டுக் கொண்டே சந்திக்கலாமா? : கோவா முதல்வருக்கு அழைப்பு விடுத்த பெண் எழுத்தாளர்! 

பனாஜி:  மாநிலத்தில் பெண்கள் கூட பீர் குடிக்கத் தொடங்கி விட்டனர் என்று கருத்து தெரிவித்த கோவா மாநில முதல்வருக்கு பதிலளிக்கும் விதமாக, பீர் சாப்பிட்டுக் கொண்டே சந்திக்கலாம் என்று அவருக்கு பெண் எழுத்தாளர் ஒருவர் விடுத்த அழைப்பானது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

கோவா மாநிலத்தின் பனாஜி நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் பேசும் பொழுது, "கோவா மாநிலம், மக்கள் அதிகம் விரும்பும் சுற்றுலாத் தலமாக மாறிய பிறகு போதைப்பொருள் வர்த்தகமும் அதிகரித்துவிட்டது. போதைப்பொருள் வர்த்தகக் கும்பலை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் போதைப்பொருள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை அரசின் நடவடிக்கை தொடரும். மாநிலத்தில் மாணவிகள் கூட பீர் குடிக்கத் தொடங்கி விட்டனர். எனக்கு இது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது." என்று தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்தானது சமூக வலைத்தளங்களில் பலத்த சர்ச்சையினை கிளப்பியுள்ளது. அவருக்கு எதிராக பலரும் பதிலளித்தனர். இன்னும் ஒரு படி மேலாக, டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்  #GirlsWhoDrinkBeer என்ற ஹேஷ்டேக்குடன், பெண்கள் பீர் அருந்தும் புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டன  

இந்நிலையில் தில்லியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஒருவர் பீர் சாப்பிட்டுக் கொண்டே உங்களை சந்திக்கலாம் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிகருக்கு விடுத்த அழைப்பானது, தற்பொழுது  சமூக வலைத்தளத்தில் வெகுவாகப்  பகிரப்பட்டு வருகிறது. 

தில்லியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் கோட்டா நீலிமா. இதுவரை ஆறு நாவல்களை எழுதியுள்ளார். அவர் இந்த பிரச்சினைக்குப் பிறகு கோவா முதல்வர் பாரிகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் பிரதியை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

வருகின்ற மார்ச் 5-ஆம் தேதியன்று நானும், என்னைப் போன்றே இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய ஆண்களும் பெண்களும் கோவா வருகிறோம். அன்று மாலை 5 மணி அளவில் உங்களது அலுவலகதிலோ அல்லது வீட்டிலோ உங்களைச் சந்தித்து, ஒரு பீர் அருந்திக் கொண்டே உங்களுடன் இதுபற்றிப் பேச விரும்புகிறோம்.  

அதன்மூலம் அரசியலிலும் ஜனநாயக அரசங்களிலும் நிலவும் இத்தகைய ஆணாதிக்க சிந்தனைகளுக்கு எதிரான ஒரு கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறோம். நீங்கள் லட்சக்கணக்கானோரின் வாழ்வினை பாதிக்கக் கூடிய முடிவுகளை எடுக்கக் கூடிய, அரசியல் சாசன மதிப்புமிக்க முக்கியமான ஒரு பதவியிலிருக்கிறீர்கள். அந்த லட்சக்கணக்கானோரில் பீர் குடிக்கும் பெண்களும் அடங்குவார்கள் என்பதால், உங்களது கவலையைப் போக்க வேண்டியது பொறுப்புள்ள குடிமக்களின் கடமையாகிறது.  

எனவே அன்று எங்களை சந்திக்க தயாராக இருங்கள். ஆனால் உங்களது இயல்புக்கு ஏற்ப  நீங்கள் இத்தகைய பீர் சந்திப்பை தவிர்ப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன், அதுவும் பெண்களுடன்..!.

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதமும் அவரது அழைப்பும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com