தில்லி அரசுக்கே அதிகாரம்: முதல்வர் - துணைநிலை ஆளுநர் மோதலில் உச்ச நீதிமன்றம் அதிரடி

தில்லியின் ஆட்சி நிர்வாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை அதிரடி தீர்ப்பளித்தது.
தில்லி அரசுக்கே அதிகாரம்: முதல்வர் - துணைநிலை ஆளுநர் மோதலில் உச்ச நீதிமன்றம் அதிரடி

தில்லியின் ஆட்சி நிர்வாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை அதிரடி தீர்ப்பளித்தது.
மேலும், தில்லி அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையிலேயே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் துணைநிலை ஆளுநருக்கு சுதந்திரமான முடிவை எடுக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்படவில்லை என்பதால், அரசின் செயல்பாடுகளில் அவர் குறுக்கிடுபவராக இருக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே நிர்வாக ரீதியிலான அதிகார மோதல் சுமார் மூன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், அதிகார மோதல் வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை தீர்ப்பு அளித்தது. 
இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் சார்பில் ஒரு தீர்ப்பும், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் தரப்பில் தனித்தனியாக என மூன்று வகையான தீர்ப்புகள் ஒரே கருத்துடன் அளிக்கப்பட்டுள்ளன. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு: 
நாடாளுமன்ற, சட்டப் பேரவை வடிவைக் கொண்டுள்ள நமது அரசு முறை, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக் கொள்கையின் அடிப்படையில் இயங்குகிறது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த துணைநிலை ஆளுநரின் போக்கு தடையாக இருக்குமானால், கூட்டுப் பொறுப்புக் கொள்கை பயனற்றதாகிவிடும். மத்திய, மாநில அரசுகள் அரசியல் சாசன முரண்பாடுகளை கூடுமானவரை தவிர்த்து, நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்.
மாநில அந்தஸ்து இல்லை: புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் வழக்கில் 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பின் படியும், தற்போதுள்ள அரசியலமைப்பு ஏற்பாட்டின்படியும் தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது. தில்லி துணைநிலை ஆளுநரின் தகுதிநிலை பிற மாநிலங்களின் ஆளுநர்களைப் போல இல்லாமல், நிர்வாகியாக மட்டுமே இருக்கிறார். அரசியலமைப்பு விதி 239ஏஏ(3)(ஏ) பிரிவு 6-ஆவது திருத்தத்தின்படி, தில்லிக்காக ஒர் பிரதிநிதித்துவ அரசை நாடாளுமன்றம் உருவாக்கியுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவரிடம் கேட்டுப் பெற வேண்டிய விவகாரங்கள் தவிர்த்து, அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் துணைநிலை ஆளுநர் இயங்க வேண்டும்.
சட்டம் இயற்ற அதிகாரம்: தில்லிக்கான மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவற்றில் உள்ள துறைகள் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது. அதே சமயம், மாநிலப் பட்டியலில் உள்ள நிலம், காவல் துறை, சட்டம்-ஒழுங்கு ஆகிய மூன்று துறைகள் நீங்கலாக பொதுப் பட்டியலில் உள்ள துறைகள் அனைத்துக்கும் சட்டம் இயற்ற தில்லி சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. பொதுப்பட்டியலில் உள்ள அனைத்துத் துறைகள் தொடர்பாக முடிவெடுக்கும் நிர்வாக அதிகாரம் தில்லி அமைச்சர்களுக்கு உண்டு.
அரசியலமைப்பு விதி 239ஏஏ 4-ஆவது பிரிவின்படி, தில்லி அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையிலேயே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். துணைநிலை ஆளுநருக்கு சுதந்திரமான முடிவை எடுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை அடிப்படையிலோ அல்லது குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவின் அடிப்படையிலோ மட்டுமே செயல்பட வேண்டும்.
அரசியலமைப்பு விதி 239ஏஏ 4-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ள "எந்தவொரு விவகாரம்' என்பதை அனைத்து விவகாரம் எனப் பொருள் கொள்ளக் கூடாது. அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் துணைநிலை ஆளுநர் தனது அறிவைக் கொண்டு ஆராயாமல், இயந்திரத்தனமாக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கக் கூடாது. அமைச்சரவைக் குழுவுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே ஏற்படும் மாறுபட்ட கருத்துகளில் அடிப்படைக் காரணங்கள் இருக்க வேண்டும். மாறாக குறுக்கீடு செய்வதாக இருக்கக் கூடாது.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: கருத்து வேறுபாடுகள் எழும்போது அவற்றுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அமைச்சரவையில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்பதற்கு, அனைத்து முடிவுகளுக்கும் அவருடைய ஒப்புதலைப் பெற வேண்டும் எனப் பொருள் கொள்ளத் தேவையில்லை. அரசியல் அமைப்பு அதிகாரம் கொண்டவர்கள் அவர்களுடைய பொறுப்புகளை உணர்ந்தும், முன்னுதாரணமாகத் திகழும் வகையிலும் அரசியலமைப்பின் மறுமலர்ச்சியின் புரிதலை பண்படுத்த வேண்டும். இந்தக் கருத்தியலுடன் துணைநிலை ஆளுநரும், முதல்வர் தலைமையிலான அமைச்சரவையும் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 
பின்னணி: "தில்லியில் ஆளும் அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே உள்ளது' என்று குறிப்பிட்டு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து தில்லி அரசு தொடுத்த வழக்கில், "தில்லி அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது' என்று 2016-இல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
இதையடுத்து, தில்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 15 நாள்கள் நடைபெற்ற வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, கடந்த 2017, டிசம்பர் 6-ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி
உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது தில்லி மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் குறிப்பிட்டார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், "இது ஒரு வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பாகும். இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை செயல்படுத்த வழிவகுக்கும்' என்றார்.
- கேஜரிவால் 
தில்லி முதல்வர்
தீர்ப்பை கொண்டாடுவதில் அர்த்தமில்லை
இந்தத் தீர்ப்பை தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை. மத்திய அரசையும், தில்லி துணைநிலை ஆளுநரையும் காரணம் காட்டி தில்லியில் மேம்பாட்டுப் பணிகளை செய்யாத கேஜரிவால் அரசு, இனியாவது மக்கள் பணிகளில் ஈடுபட வேண்டும்.
சாம்பித் பத்ரா 
- பாஜக செய்தித் தொடர்பாளர்
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் அமைச்சகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதன் மீது ஆலோசிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
- மத்திய உள்துறை அமைச்சகம்
தில்லி அரசு செய்தது சரியென்றாகிவிடாது 
இந்தத் தீர்ப்பு தில்லி மக்களுக்கு முக்கியமானதொரு தீர்ப்பாகும். இதனால் தில்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே நிலவும் மோதல் போக்கு முடிவுக்கு வரும் என நம்புகிறேன். அதே சமயம், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பால், ஆம் ஆத்மி அரசு செய்தது சரியென்றாகிவிடாது
ஷீலா தீட்சித் 
- முன்னாள் முதல்வர் 
(காங்கிரஸ்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com