ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் ஈரான்- எச்சரிக்கைகளுக்கு நடுவில் தத்தளிக்கும் இந்தியா

எங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால்,  நாங்கள் அளித்து வரும் சிறப்புச் சலுகையை இந்தியா இழக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் ஈரான்- எச்சரிக்கைகளுக்கு நடுவில் தத்தளிக்கும் இந்தியா

எங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால்,  நாங்கள் அளித்து வரும் சிறப்புச் சலுகையை இந்தியா இழக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஈரானுடன் போடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடையை அறிவித்தது. இதன்மூலம், அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இனிமேல் ஈரானுடன் வர்த்தகத்தை தொடரக்கூடாது, மீறினால்  இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. நவம்பர் 4-ஆம் தேதிக்குள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கெடு விதித்தது. 

ஈராக், சவுதி அரேபியாவை அடுத்து அதிக ஈரானிடம் இருந்து தான் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அதனால், அமெரிக்காவின் நடவடிக்கை இந்தியாவுக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா ஈரானிடம் இருந்து இறக்குமதியை நிறுத்தினாலும் மாற்று வழியாக சவுதி அரேபியாவிடம் இருந்து செய்யும் இறக்குமதியை அதிகரிக்க இந்தியா நடவடிக்கையை மேற்கொண்டது. 

இந்நிலையில், தூதரக அதிகாரி மசூத் ரெஸ்வேனியன் ரஹாகி இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 

"சாபஹார் துறைமுகத்தின் விரிவாக்கத்துக்காக, தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்தியா முதலீட்டை செலுத்தவில்லை. மேலும்,  இந்த துறைமுகத்தின் மூலம் இணைக்கும் திட்டங்கள் ஏதும் நிறைவடையவில்லை. இது துரதிருஷ்டவசமானது.  சாபஹார் துறைமுகத்தில், இந்தியாவின் ஒத்துழைப்பு மற்றும் மணஉறுதி இலக்கை அடையும் நோக்கத்தில் இருக்கும் பட்சத்தில் இந்த விவகாரத்தில் இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்கிறோம். 

எண்ணெய் விலை நிர்ணயத்தை நுகர்வோர் மற்றும் விற்பனையாளர் நலனை மனதில் வைத்தே ஈரான் பின்பற்றுகிறது. 

கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 சதவீத எண்ணெய் தட்டுப்பாட்டுக்காக இந்தியா ஈரானுக்கு மாற்றாக சவுதி அரேபியா, ரஷியா, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளை அணுகும் பட்சத்தில், இந்தியா டாலருக்கு நிகரான தொகையில் இறக்குமதி செய்ய நேரிடும். அது இந்தியாவின் செலவை அதிகளவில் உயர்த்தும். மேலும், இதன்மூலம் ஈரான் வழங்கி வரும் சிறப்பு சலுகைகளையும் இந்தியா இழக்க நேரிடும். 

இந்த உறவை நிலையான உறவாக நீட்டிப்பதற்கு நாம் உழைக்க வேண்டும். இதற்கு திடமான அரசியல் உறுதி வேண்டும். இருநாடுகளும் வங்கிப் பரிவர்த்தணை, புதிய பரிவர்த்தணை பாதைகள் உள்ளிட்டவற்றை அமைத்து இருநாடுகளின் சந்தை மற்றும் வர்த்தகத்துக்கு உதவவேண்டும்.

சுயநல அணுகுமுறையால், அமெரிக்கா மொத்த உலகையுமே இலக்காக வைத்து ஒன்று நட்புறவு நாடு அல்ல போட்டி நாடு என்று கருதுகிறது. அதனால், இந்த அச்சுறுத்தும் கொள்கையை அமெரிக்கா கைவிட வேண்டும்" என்றார்.   

இந்தியா - ஈரான் உறவு:

கடந்த மே 2016-இல், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் 3 நாடுகளுக்கு இடையில் பயணிகள் பயணிக்க, சரக்குகளை இறக்குமதி ஏற்றுமதி செய்ய கடல் வழி போக்குவரத்துக்கு திட்டம் வகுத்தனர். ஈரானின் பிராந்திய மையமாக இருக்கும் சாபஹார் துறைமுகத்தை இந்த போக்குவரத்துக்கு பயன்படுத்திக் கொள்ள 3 நாடுகளும் முடிவெடுத்தனர். இதற்காக இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உடன்படிகை கையெழுத்திட்டனர். 

இந்த 3 நாடுகளுக்கிடையிலான போக்குவரத்துக்கு பாகிஸ்தான இடையூறாக இருந்த நிலையில் இந்த கடல்வழி போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. 

பிறகு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் ஈராக் மற்றும் சவுதி அரேபியாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது ஈரான் தான். கடந்த ஏப்ரல் 2017 முதல் ஜனவரி 2018 வரை(2017-18 நிதியாண்டின் முதல் 10 மாதங்கள்) இந்தியாவுக்கு 18.4 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை ஈரான் வழங்கியுள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையை மனதில் வைத்து இந்தியா ஈரானுடனான வர்த்தக உறவை துண்டிக்கவுள்ளது. சாபஹார் துறைமுகத்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் செயலும் அமெரிக்காவின் பொருளாதார தடைக்குள் இடம்பெறுகிறது. 

அதேசமயம், ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் சாபஹார் துறைமுக திட்டத்தின் முக்கியத்துவத்தை அமெரிக்காவிடம் இந்தியா எடுத்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com