தலைநகரின் உச்சபட்ச மின்தேவை 7 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது

தேசியத் தலைநகர் தில்லியின் உச்சபட்ச மின் தேவை முதல் முறையாக செவ்வாய்க்கிழமை 7 ஆயிரம் மெகா வாட் என்ற அளவை எட்டியது. 
தலைநகரின் உச்சபட்ச மின்தேவை 7 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது

தேசியத் தலைநகர் தில்லியின் உச்சபட்ச மின் தேவை முதல் முறையாக செவ்வாய்க்கிழமை 7 ஆயிரம் மெகா வாட் என்ற அளவை எட்டியது. 
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள புழுக்கத்தையும், வெப்பத்தையும் தணிக்கும் வகையில் பொதுமக்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிகளவில் குளிர்சாதனங்களைப் பயன்படுத்தி வருவதால் இந்த அளவுக்கு மின் தேவை ஏற்பட்டது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கோடை காலத்தில் தில்லியின் மின்தேவை 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இது குறித்து தில்லியில் மின் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஏ.சி. , மின் விசிறி, ஏர்கூலர்கள் போன்ற குளிர்சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், காற்றில் ஈரப்பதம் அளவு குறையும் வரை இந்த மாதத்தில் மின் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டில் 7,200 மெகாவாட் மின் தேவை வரை சமாளிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்துறையும் நிலைமையை கண்காணித்து வருகிறது என்றார் அவர். 
மற்றொரு அதிகாரி கூறுகையில், "வழக்கமாக தில்லியில் வருடாந்திர மின் தேவை அதிகரிப்பு 2-4 சதவீதமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு, மின் நுகர்வில் புதிய சாதனை ஏற்பட்டிருக்கிறது. எப்போது உச்சபட்ச மின்தேவை நிலைபெறும் என்பது தெரியவில்லை'என்றார். 
தொழில்துறை நிபுணர்கள் கூறுகையில், "பொதுவாக தில்லியில் ஜூலை மாதத்தில் மின் தேவையின் அளவு அதிகமாக இருக்கும். குறிப்பாக அதிகமான அளவில் ஏ.சி. சாதனங்கள் பயன்படுத்தப்படுவதால் இந்த மாதத்தில் அதுபோன்ற நிலைமை இருக்கும். இதுவரை, ஜூலையில் உச்சபட்ச மின் தேவை 7 ஆயிரம் மெகாவாட் என்ற சாதனை எட்டப்பட்டுள்ளது. வரும் நாள்களிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றார்.
 நகரில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதன் காரணமாக புழுக்கம் அதிகரித்துள்ளது. இதனால், மின்நுகர்வும் அதிகரித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை நகரில் அதிகபட்ச வெப்பநிலை இந்த சீசனில் வழக்கத்தைவிட மூன்று புள்ளிகள் அதிகரித்து 39.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. ஈரப்பதம் 50 சதவீதம் மற்றும் 80 சதவீதத்திற்கு இடைப்பட்ட வகையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
எனினும், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தினர் கணித்துள்ளனர். பாலம், ஆயா நகர் ஆகிய இடங்களில் வெப்பநிலை அதிகளவில் காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையானது மழைக்குப் பிறகு அடுத்த சில தினங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டு வாரியான உச்சபட்ச மின்தேவை 
(மெகாவாட்)
2018 (ஜூலை 10)     -     7,016 
2018 (ஜூலை 9)       -     6,998 
2017 (ஜூன் 6)         -      6, 526
2016 (ஜூலை1)       -     6, 261
2015 (ஜூன்19)        -     5,846
2014 (ஜூலை15)     -     5,925
2013 (ஜூன்6)          -     5,653 
2012 (ஜூலை 5)      -     5,642 
2011 (ஆகஸ்ட்2)     -     5,028 
2010 (ஜூலை 1)      -     4,720
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com