ஓரினச்சேர்க்கை தடைப்பிரிவை நீக்கினால் களங்கம் தீரும்: உச்ச நீதிமன்றம் கருத்து

கருத்தொற்றுமையின் பேரில் நடைபெறும் ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377-ஆவது பிரிவை ரத்து செய்துவிட்டால், சமூகத்தில் அவர்கள் மீது படிந்துள்ள களங்கமும்,
ஓரினச்சேர்க்கை தடைப்பிரிவை நீக்கினால் களங்கம் தீரும்: உச்ச நீதிமன்றம் கருத்து

கருத்தொற்றுமையின் பேரில் நடைபெறும் ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377-ஆவது பிரிவை ரத்து செய்துவிட்டால், சமூகத்தில் அவர்கள் மீது படிந்துள்ள களங்கமும், பாகுபாடும் நீங்கிவிடும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந்த சட்டப் பிரிவை நீக்கக் கோரும் மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு களையப்பட வேண்டும் என்ற சிந்தனை இந்திய சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது என்றும், பாகுபாடு காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மனேகா குருசாமியிடம், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பிறரைப் போன்ற உரிமைகள் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் சட்டம், ஒழுங்குமுறை விதிகள், சட்டப்பிரிவுகள் அல்லது விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா?'' என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பினார். அதற்கு, அந்த வழக்குரைஞர் இல்லை என்று பதில் அளித்தார்.
மூத்த வழக்குரைஞர் சி.யு.சிங் வாதிடுகையில், 377-ஆவது சட்டப்பிரிவை நீக்குவதால் மட்டுமே, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான சமூகப் பாகுபாடு நீங்கி விடும் எனக் கூறி விட முடியாது'' என்று தெரிவித்தார்.
அப்போது, பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நபர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டக் கூடாது என்பது உண்மைதான் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
முன்னதாக, இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, 377-ஆவது சட்டப்பிரிவை நீக்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
சக பாலினத்தவருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது அல்லது விலங்குகளுடன் உறவு வைப்பது போன்றவற்றை இயற்கைக்கு மாறான பாலியல் உறவாக 377-ஆவது சட்டப்பிரிவு வரையறை செய்கிறது. தற்போது, இதன்படி தவறிழைக்கும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com