சஹாரா சொத்துகளை ஏலம் கோர எவரும் முன்வரவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தகவல்

சஹாரா குழுமத்துக்குச் சொந்தமான ஆம்பி வேலி சொத்துகளை ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சஹாரா குழுமத்துக்குச் சொந்தமான ஆம்பி வேலி சொத்துகளை ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால், அவற்றை ஏலம் விடும் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிக வட்டி தருவதாகக் கூறி, முதலீட்டாளர்களிடம் வசூலித்த ரூ.24,000 கோடியை திருப்பித் தராததால், சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய், அந்த குழுமத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ரவிசங்கர் துபே, அசோக் ராய் செளதரி ஆகியோர் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஏறத்தாழ 2 ஆண்டுகள் சிறையில் இருந்த சுப்ரதா ராய், தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் பரோலில் வெளியே வந்தார். அதிலிருந்து அவரது பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தருவதற்கான தொகையை, இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) சஹாரா குழுமம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சொத்துகளை விற்று, அந்தத் தொகையைச் செலுத்துவதாக நீதிமன்றத்தில் சஹாரா குழுமம் உறுதியளித்திருந்தது. ஆனால், அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள ஆம்பிவேலி சொத்துகளை அக்குழுமம் விற்பனை செய்யத் தவறியதால், அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மும்பை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மும்பை உயர் நீதிமன்ற சிறப்பு அதிகாரி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஆம்பிவேலி திட்டத்தின் கீழ் உள்ள சொத்துகளை ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட சொத்துகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதனிடையே, மும்பையின் வாசை பகுதியில் உள்ள சஹாரா குழுமத்துக்குச் சொந்தமான சொத்தை வாங்க இரு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தன.
இதையடுத்து ரூ.1,000 கோடியை செபி - சஹாரா கணக்கில் டெபாசிட் செய்யுமாறு அந்த நிறுவனங்களை நீதிபதிகள் அறிவுறுத்தினர். படிப்படியாக அந்தத் தொகையை குறிப்பிட்ட கால வரையறைக்குள் செலுத்திவிட வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com