நிதீஷுடன் கூட்டணி பலமாக உள்ளது: அமித் ஷா

பிகாரில், நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியுடன் கூட்டணி பலமாகவே உள்ளது என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்தார். 
பாட்னாவில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.
பாட்னாவில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.

பிகாரில், நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியுடன் கூட்டணி பலமாகவே உள்ளது என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்தார். 
பாட்னாவில், முதல்வர் நிதிஷ் குமாரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய பிறகு அமித் ஷா இவ்வாறு கூறினார்.
ஒருநாள் பயணமாக பிகார் வந்த அமித் ஷா, விமான நிலையத்தில் இருந்து பாட்னாவில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்துக்குச் சென்றார். சிறிது நேரத்தில் முதல்வர் நிதீஷ் குமார் அங்கு வந்து சேர்ந்தார். பிகார் மாநிலத்துக்கான பாஜக மேலிடப் பொறுப்பாளர் பூபேந்திர யாதவ், நிதீஷை வரவேற்று அழைத்துச் சென்றார்.
காலை விருந்து: நிதிஷ் குமார் மற்றும் அமித் ஷா ஆகியோர் கூட்டாக காலை சிற்றுண்டி விருந்தில் கலந்து கொண்டனர். இதன் பின்னர், இரு தலைவர்களும் சுமார் 45 நிமிடங்களுக்கு பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிறகு அமித் ஷா, நிதீஷ் குமார், பாஜக துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, மாநில பாஜக தலைவர் நித்தியானந்த ராய் உள்ளிட்ட தலைவர்களை செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தனர். அப்போது, நிதீஷ் குமாரின் முகம் அளவில்லா புன்னகையுடன் காணப்பட்டது.
இதேபோல், மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், ராதா மோகன் சிங், ராம் கிருபால் யாதவ் ஆகியோரும் நிதீஷ் குமாரை சந்தித்துப் பேசினர். 
இதன் பின்னர், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அமித் ஷா உரையாற்றினார். அப்போது, பிகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி இடையே தொகுதிப் பங்கீட்டில் குழப்பம் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் பேசிக் கொண்டே இருக்கட்டும். ஆனால், 40 தொகுதிகளிலும் நாம் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம்'' என்று அமித் ஷா தெரிவித்தார். நிதீஷ் குமாருடனான கூட்டணி பலமாகவே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமித் ஷா இவ்வாறு கூறினார்.
சர்ச்சையும், நிகழ்வுகளும்: கடந்த 2013-ஆம் ஆண்டில், மக்களவைத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வந்த சூழலில், பாஜக தலைவர்களுடன் நிதீஷ் குமார் இதேபோன்று விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன், தாம் இருக்கும் புகைப்படங்கள் செய்தித்தாள்களில் வெளியானதைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியை நிதீஷ் ரத்து செய்தார்.
இதன் தொடர்ச்சியாக ஜேடியூ - பாஜக இடையிலான 17 ஆண்டுகால கூட்டணி முடிவுக்கு வந்தது. இதனால், மக்களவைத் தேர்தலில் ஜேடியூ மிகுந்த பின்னடைவை சந்தித்தது. இருப்பினும், அடுத்து வந்த சட்டப்பேரவைத் தேர்தலில், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து நிதீஷ் குமார் வெற்றி பெற்றார்.
ஆனால், திடீரென அந்தக் கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ் குமார், மீண்டும் பாஜகவுடன் கைகோத்து ஆட்சி அமைத்தார். இந்நிலையில், இந்த புதிய இணைப்புக்கு பிறகு, நிதீஷ் குமாரை, அமித் ஷா முதல்முறையாக சந்தித்துப் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com