சத்தீஸ்கர் அரசு மீது விமர்சனம்: ராகுலுக்கு அமித் ஷா கண்டனம்

சத்தீஸ்கர் மாநில பாஜக அரசின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு தாங்கள் பதில் அளிக்கத் தேவையில்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
சத்தீஸ்கர் அரசு மீது விமர்சனம்: ராகுலுக்கு அமித் ஷா கண்டனம்

சத்தீஸ்கர் மாநில பாஜக அரசின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு தாங்கள் பதில் அளிக்கத் தேவையில்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
அரசின் செயல்பாடு குறித்து மக்களுக்கு பதில் அளிப்போம் என்றும் அமித் ஷா கூறினார்.
மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் சத்தீஸ்கரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாஜக அரசின் செயல்பாடு குறித்து கணக்கு காண்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், அம்பிகாபூர் என்னும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:
ராகுல் காந்தி அவர்களே, நான்கு ஆண்டுகால ஆட்சி குறித்து நீங்கள் ஏன் கணக்கு கேட்கிறீர்கள்? நாங்கள் உங்களுக்கு கணக்கு காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. அரசின் ஒவ்வொரு பைசா செலவு மற்றும் ஒவ்வொரு நிமிடத்தின் செயல்பாடு குறித்து, வாக்கு கேட்க செல்லுகையில் மக்களுக்கு நாங்கள் கணக்கு காண்பிப்போம்.
நான்கு தலைமுறைகளாக உங்களது குடும்பம் இந்த நாட்டை 55 ஆண்டுகளுக்கு ஆண்டுள்ளது. ஆனால், நாட்டில் ஏன் வளர்ச்சி ஏற்படவில்லை? 
நாட்டில் ஏழைகள், விவசாயிகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்காக 15 நாள்களுக்கு ஒருமுறை புதுப்புது திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து தொடங்கி வைக்கிறார். வெயில் காலம் தொடங்கிவிட்டதால் அவர் (ராகுல் காந்தி) ஐரோப்பாவுக்கும், இத்தாலிக்கும் ஓய்வெடுக்க சென்றுவிட்டார். வாக்கு கோருவதற்காக ராகுல் காந்தி இங்கு திரும்பி வரும்போது, காங்கிரஸின் குற்ற வரலாறு குறித்து நீங்கள் கேள்வி கேளுங்கள்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் எல்லை தாண்டிய தாக்குதல் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். ஒருமுறை உரியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு ஒரு வாய்ப்புகூட வழங்கப்படவில்லை.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கே சென்று அதிரடி தாக்குதலை (சர்ஜிகல் ஸ்டிரைக்) நடத்தினார் என்றார் அமித் ஷா.

இடஒதுக்கீடு, எஸ்சி/எஸ்டி சட்டம் தொடரும்

மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு, பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவை தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அம்பிகாபூர் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
சத்தீஸ்கரில் விரைவில் தேர்தல் காலம் தொடங்கவுள்ள என்பதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பொய்களை பரப்பும்.
வரும் நாள்களில் மக்களை குழப்பும் விதமாக பல்வேறு பொய்களை காங்கிரஸ் கட்சி பரப்பும். சில சமயம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அவர்கள் கூறலாம். அதைவிட, இடஒதுக்கீடு ரத்தாகவிட்டது என்றும்கூட அவர்கள் சொல்வார்கள்.
ஆனால், பாஜக ஆட்சியில் இருக்கும் வரை அவை தொடரும் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com