சுடச்சுட

    

    ஒடிஸா மாநிலம், புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில், ரத்னா பந்தர்' என்ற பெயரில் அமைந்துள்ள கருவூலத்தின் மாற்று சாவி கிடைத்துள்ளது. முன்னதாக, சாவி காணாமல் போனதால் பல நாள்களாக இந்த அறை திறக்கப்படாமல் இருந்தது.
    ஜெகந்நாதர் கோயில் கருவூலத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு ஒடிஸா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, 16 நபர்கள் அடங்கிய குழு அங்கு கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஆய்வு செய்தது.
    கருவூலத்தின் வெளிப்புறங்களில் அந்தக் குழு ஆய்வு செய்தது. அதே சமயம், இரும்புக் கம்பிகளுக்கு அப்பால் இருந்த உள்புற பகுதிகளை வெளியில் இருந்தே பார்க்க முடிந்ததால், அந்த குழுவினர் உள்ளே செல்லவில்லை.
    இருப்பினும், கருவூலத்தின் உள்புற அறைக்கான சாவி காணாமல் போயிருந்தது அப்போது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, ஒடிஸா மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
    இதனால், சாவி காணாமல் போனது குறித்து நீதி விசாரணைக்கு ஒடிஸா அரசு கடந்த 4-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அத்துடன், கோவில் நிர்வாகத்தின் தலைமை அதிகாரி பொறுப்பில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி பி.கே.ஜெனாவை அரசு நீக்கியது.
    இந்நிலையில், கருவூலத்தின் மாற்று சாவி இருக்கிறதா? என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆவண காப்பக அறையில் கடந்த நான்கு நாள்களாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, அரக்கு நிறத்தில், சீலிடப்பட்ட பை ஒன்றை ஊழியர்கள் கண்டறிந்தனர். அதில், ஜெகந்நாதர் கோயில் கருவூலத்தின் மாற்று சாவி' என்று எழுதப்பட்டிருந்தது.
    அந்த சாவியை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதே சமயம், மாற்று சாவி இருப்பது தெரிந்தும் அரசு மெளனமாக இருந்தது ஏன்? மாற்று சாவி கிடைத்துள்ள நிலையில் தொலைந்த சாவியின் நிலை என்ன? என்று காங்கிரஸ், பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai