மக்கள் தீர்ப்பை வரவேற்கிறேன், வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துகள்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன். வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மக்கள் தீர்ப்பை வரவேற்கிறேன், வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துகள்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், அம்மாநில முதல்வராக கடந்த ஆண்டு தேர்வானதைத் தொடர்ந்து, எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதேபோல், துணை முதல்வராக தேர்வான கேசவ் பிரசாத் மௌர்யா, பூல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து இவ்விரு தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.

இதில், இரு மக்களவை தொகுதிகளிலும் சமாஜவாதி கட்சி, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்தே தொடர்ந்து முன்னிலை பெற்று, வெற்றிபெற்று இரு தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் எங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்துவிட்டோம்.

சமாஜவாதி மற்றும் பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணியை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட்டோம். சில உள்ளூர் பிரச்னைகளே இந்த தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. மற்றபடி மத்திய அரசின் திட்டங்களுக்கும், இந்த தோல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com