மத்திய பட்ஜெட் மசோதா: விவாதமின்றி நிறைவேறியது

தெலுங்கு தேசம், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அமளி காரணமாக மத்திய பட்ஜெட் மசோதா விவாதமின்றி புதன்கிழமை நிறைவேறியது.
மத்திய பட்ஜெட் மசோதா: விவாதமின்றி நிறைவேறியது

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு கடந்த திங்கள்கிழமை (மார்ச் 5-ஆம் தேதி) முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் முழுவதும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அவையின் நடவடிக்கைகள் பாதிப்படைந்து வருகின்றன.

நீரவ் மோடி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அதிமுக, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் ஏப்ரல் 1-ந் தேதி முதல் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், புதன்கிழமை அவை நடவடிக்கைகள் பகல் 12 மணியளவில் மீண்டும் துவங்கியபோது எதிர்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதையடுத்து, மத்திய பட்ஜெட் மசோதா மீது விவாதம் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது.

இதற்கிடையில், நேரம் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய பட்ஜெட் தொடர்பான நிதி ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், குரல் ஓட்டெடுப்புக்கு அனுமதியளித்தார். எனவே குரல் ஓட்டெடுப்பு முறையில் இந்த மசோதா எளிதில் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com