Enable Javscript for better performance
கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன்- Dinamani

சுடச்சுட

    

    கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன்

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kc

    ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
     இந்த வழக்கில், சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 28ஆம் தேதி கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தை காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது. பின்னர் நீதிமன்றக் காவலில் 12 நாள்கள் கார்த்தி சிதம்பரம் வைக்கப்பட்டார். இந்தக் காவல் சனிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு நீதிபதி எஸ்.பி. கார்க் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
     சிபிஐ வழக்குரைஞர் வாதாடுகையில், "கார்த்தி சிதம்பரம் சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்; அவர் ஏற்கெனவே இந்த வழக்கில் ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்' என குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரத்தின் வழக்குரைஞர் மறுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு நீதிபதி கூறியதாவது:
     நீதியிடம் இருந்து கார்த்தி சிதம்பரம் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. அவரது பெற்றோர், மூத்த வழக்குரைஞர்களாக உள்ளனர். அவருக்கு என குடும்பமும் உள்ளது. இதற்கு முன்பு எந்த வழக்கிலும் அவர் தண்டிக்கப்பட்டதுமில்லை.
     அதேவேளையில், கார்த்தி சிதம்பரத்தின் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (சிஎம்எஸ்) நிறுவனம், அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் (ஏசிஎஸ்) நிறுவனம் (ஐஎன்எக்ஸ் ஊடகத்திடம் இருந்து ரூ.10 லட்சம் பெற்ற நிறுவனம்) இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. இதையே காரணமாக கொண்டு, கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுக்க முடியாது. ஏனெனில், அந்தத் தொகையானது, அந்த நிறுவன கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காசோலையாக பெறப்பட்டுள்ளது.
     இந்தத் தொகையால் பயனடைந்தது யார் என்பது விசாரணைக்கு உரியது ஆகும். மேலும், கார்த்தி சிதம்பரத்துக்கும் ஏசிஎஸ் நிறுவனத்துக்கும் இடையே எத்தகைய உறவு இருந்தது என்பதற்கான ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆதலால், கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பு பிரமாண உறுதிபத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில், ஜாமீன் அளிக்கப்படுகிறது. அதேபோல், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது. இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ அவருக்கு இருக்கும் வங்கி கணக்கை சிபிஐயின் ஒப்புதல் இல்லாமல் ரத்து செய்யக் கூடாது.
     எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராக வேண்டும். அரசு தரப்பு சாட்சிகளை தொடர்பு கொள்ளவோ அல்லது ஆதாரத்தை கலைக்கும் செயலிலோ ஈடுபடக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளும் கார்த்தி சிதம்பரத்துக்கு விதிக்கப்படுகின்றன என்றார் நீதிபதி.
     முன்ஜாமீன்கோரி மனு: இதனிடையே, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், முன்ஜாமீன் கோரி தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி முன்பு கார்த்தி சிதம்பரம் சார்பில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சனிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai