Enable Javscript for better performance
தூதரக அதிகாரிகள் அவமதிப்பு புகார்களுக்கு விரைவில் தீர்வு: பாகிஸ்தான் தூதர்- Dinamani

சுடச்சுட

    

    தூதரக அதிகாரிகள் அவமதிப்பு புகார்களுக்கு விரைவில் தீர்வு: பாகிஸ்தான் தூதர்

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்களுக்கு விரைவில் தீர்வு காண இருப்பதாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகமது கூறினார்.
     தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் இந்திய அதிகாரிகள் அவமதிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதேபோல், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் அந்நாட்டு அதிகாரிகள் துன்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.
     இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்த நிலையில், இதுதொடர்பாக, விவாதிப்பதற்கு தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகமதுவுக்கு பாகிஸ்தான் அரசு கடந்த வாரம் அழைப்பு விடுத்தது. அதன்படி, பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த சோஹைல் முகமது, வியாழக்கிழமை இரவு தில்லி திரும்பினார்.
     அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தேசிய தினத்தையொட்டி, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அங்கு அந்நாட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
     தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து பாகிஸ்தான் அரசுடன் விவாதித்தேன். இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். ஏனெனில், இந்தப் பிரச்னையால், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு பாதிக்கப்படுகிறது.
     அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு பாகிஸ்தான் அரசு விரும்புகிறது. இதேபோல், காஷ்மீர் பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் என்றும் பாகிஸ்தான் நம்புகிறது. இவ்வாறு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகள் தீர்க்கப்பட்டால், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி நிலவும் என்றார் அவர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai