Enable Javscript for better performance
நமக்கு எதிராக பாஜக சதி: சந்திரபாபு நாயுடு மறைமுகத் தாக்கு- Dinamani

சுடச்சுட

    

    நமக்கு எதிராக பாஜக சதி: சந்திரபாபு நாயுடு மறைமுகத் தாக்கு

    By  அமராவதி,  |   Published on : 24th March 2018 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "நமக்கு எதிராக சதிவலை பின்னப்படுகிறது. எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்' என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
     மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி அண்மையில் தனது அமைச்சர்களை ராஜிநாமா செய்யுமாறு பணித்தது. அதைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியில் இருந்தும் வெளியேறியது. இதையடுத்து இரு கட்சிகளிடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது.
     இதனிடையே, பட்டிசீமா நீர்ப்பாசனத்தில் ஆந்திர அரசு ஊழலில் ஈடுபட்டதாகவும் அதை தலைமைத் தணிக்கையாளர் அமைப்பு (சிஏஜி) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் ஆந்திர பாஜக பிரமுகர் விஷ்ணுகுமார் ராஜு குற்றம்சாட்டினார்.
     அதேபோல், இந்த விவகாரத்தை முன்வைத்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், ஜன சேனை கட்சித் தலைவர் பவன் கல்யாணும் சந்திரபாபு நாயுடு மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பினர். அதை நாயுடு மறுத்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் பாஜக இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி சந்தேகிக்கிறது. பட்டிசீமா நீர்ப்பாசன முறைகேடு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புள்ளதாக ஊகங்கள் எழுந்துள்ளன.
     இந்த நிலையில், அவர் காணொலி முறையில் தன் கட்சி எம்.பி.க்களிடையே வெள்ளிக்கிழமை பேசியது:
     நாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதால், எனக்கு எதிராகவும், என் மகன் நாரா லோகேஷுக்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட வாய்ப்புள்ளது.
     நமக்கு எதிராக சதிவலை பின்னப்படுகிறது.
     தென்னிந்தியாவில் அரசியல் தலைமையை பலவீனப்படுத்த பாஜக முயற்சிக்கிறது. தெலுங்கு தேசம் வலுவாக இருப்பது என்பது ஆந்திரம் வலுவாக இருப்பதாக அர்த்தம். அதனால்தான் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், ஜனசேனை ஆகியவற்றைப் பயன்படுத்தி நமது கட்சியை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று நாயுடு தெரிவித்தார்.
     அவர் ஏற்கெனவே ஆந்திர சட்டப் பேரவையில் பேசும்போது, "தலைமைத் தணிக்கையாளர் அமைப்பானது பல்வேறு விவகாரங்களில் மோடி அரசையும் குறைகூறியுளளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
     நாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோது நம் மீது ஊழல் புகார்கள் கூறப்படவில்லை. நாம் அதில் இருந்து வெளியேறியதும் திடீரென்று நமக்கு எதிராக ஊழல் புகார் எழுப்பப்படுவது எப்படி?' என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai