Enable Javscript for better performance
நல்லாறின் குறுக்கே தடுப்பணை: தமிழக திட்டத்துக்கு கேரள அரசு எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    நல்லாறின் குறுக்கே தடுப்பணை: தமிழக திட்டத்துக்கு கேரள அரசு எதிர்ப்பு

    By  திருவனந்தபுரம்,  |   Published on : 24th March 2018 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நல்லாறு நடுவே தமிழக அரசு தடுப்பணை கட்டி வருவதற்கு கேரளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மாநில சட்டப் பேரவையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், உடனடியாக அப்பணிகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
     பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் மேல் நீராறு, கீழ் நீராறு, தூணக்கடவு, சோலையாறு, ஆழியாறு, பெருவாரிப் பள்ளம், திருமூர்த்தி, உப்பாறு ஆகிய அணைகள் கட்டப்பட்டன. அவற்றைத் தவிர, நல்லாறு மற்றும் ஆனைமலையாறு அணைகள் கட்டத் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் 35 ஆண்டுகளாக அத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்தன.
     இந்நிலையில், நல்லாறு நடுவே தடுப்பணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு அண்மையில் தொடங்கியது. இதன் மூலம் அதிக அளவில் நீரைத் தேக்கி வைத்து கூடுதல் விளைநிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தித் தரப்படும் என விளக்கமளிக்கப்பட்டது. அதற்கான முதல் நிலைப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
     இந்தச் சூழலில், தமிழகத்தின் இத்திட்டத்துக்கு கேரளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன், கேரள சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
     பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, கேரளத்துக்கு வர வேண்டிய தண்ணீர் சரிவரக் கிடைப்பதில்லை. மார்ச் 15-ஆம் தேதி வரை தமிழகத்தில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் குறைவாகவே வந்தது. நீர் திறப்பை அதிகரிக்குமாறு தமிழகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
     இதனிடையே, நல்லாறு பகுதியில் அணை கட்டும் நடவடிக்கைகளில் தமிழகம் ஈடுபட்டு வருகிறது. இது சட்டவிரோதமானது. உடனடியாக அப்பணிகளை நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக கேரளம் சார்பில் விளக்கம் கோரப்பட்டது. ஆனால், அதற்கு எந்த ஒரு பதிலும் தமிழகத்திடம் இருந்து வரவில்லை என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai